நல்லூர் ஊராட்சியில் தனியார் ஐஸ்கிரீம் கம்பெனியிலிருந்து ஏரி கால்வாயில் கழிவுநீர் கலப்பு: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

புழல், மே 21: நல்லூர் ஊராட்சியில் தனியாருக்கு சொந்தமான ஐஸ்கிரீம் கம்பெனியிலிருந்து வெளியேற்றப்படும் கழிநீர், ஏரி கால்வாயில் கலக்கிறது. இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றானது சோழவரம் ஏரி.  இந்த ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர் நல்லூர் ஊராட்சி, ஆங்காடு ஊராட்சி, கும்முனூர் ஊராட்சி வழியாகதான் ஆங்காடு ஏரியில், பல ஆண்டுகளாக சென்று சேர்கிறது. இவ்வழியில்,  தனியாருக்கு சொந்தமான ஐஸ்கிரீம் கம்பெனி உள்ளது. இங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கால்வாயில் விடப்படுவதால் அப்பகுதி முழுவதும்  துர்நாற்றம் வீசப்படுகிறது.

இதனால், ஆங்காடு பகுதியில் உள்ள கிராம மக்கள் துர்நாற்றத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். கொசு தொல்லைகள் அதிகரித்து வருவதால், இரவு நேரங்களில் தூங்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.  ஊராட்சி சார்பில் பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர். எனவே, இதுகுறித்து  உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கால்வாய்களை ஆய்வு செய்து,  இதில் கழிவுநீர் விடும் தனியார் கம்பெனி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: