பெண் பயணி தவறவிட்ட நகைப்பையை நேர்மையாக ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்: ஆவடி போலீஸ் கமிஷனர் பாராட்டு

ஆவடி, மே 21: ஆவடி அடுத்த கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பார்கவி(32), கடந்த 18ம் தேதி திருமண நிகழ்ச்சிக்காக பெரம்பூர் சென்றார். பின்னர் பெரம்பூரிலிருந்து ஆவடி ரயில் நிலையம் அருகே ஆட்டோவில் வீட்டிற்கு சென்றார். அப்போது அவரது கையில் 3 கைப்பைகள் இருந்தன. அதில் இரண்டு கைப்பையை எடுத்துக்கொண்டு இறங்கிவிட்டார்.  ஒரு கைப்பையை மறந்து அதே ஆட்டோவில் வைத்து விட்டு இறங்கி சென்றுவிட்டார்.

இந்நிலையில், சவாரி முடித்து வீடு திரும்பிய திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ்(27), ஆட்டோவில் பையை இருந்ததை பார்த்தார். அதில் 9 சவரன் நகைகள் இருந்தது. காலையில் இருந்து ஆட்டோ ஓட்டியதால் இது யார் விட்டுச் சென்ற பை என்பது அவருக்கு தெரியவில்லை. இதுகுறித்து ஆவடி ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தில் தெரிவித்து கைப்பையை அவர்களிடம் ஒப்படைத்தார். வாடிக்கையாளர் வந்து உங்களிடம் கேட்டால் கொடுத்து விடுங்கள் என்று கூறி சென்று விட்டார்.

ஒரு பையை காணவில்லை அதில் 9 சவரன் தங்கநகை இருந்ததாக கூறி பார்கவி கடந்த 19ம் தேதி ஆவடி போலீசில் புகாரளித்தார். இதையறிந்த  ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ் நேர்மையாக போலீசாரிடம் பையை ஒப்படைத்தார். ஆட்டோ ஓட்டுனர் பிரகாஷை நேரில் அழைத்து ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

Related Stories: