×

தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் நெல்லையில் இருந்து காரைக்கால் வரை ரயில் இயக்க கோரிக்கை

நாகை, மே 20: தென் மாவட்டங்களை இணைக்க திருநெல்வேலியில் இருந்து காரைக்கால் வரை ரயில்கள் இயக்க வேண்டும் என நாகூர் நாகை ரயில் உபயோகிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து சங்க தலைவர் மோகன் தென்னக ரயில்வேக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி, நாகூர், சிக்கல், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு போன்ற கோயில்களுக்கு தென்மாவட்டத்தில் இருந்து மக்கள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.

ஆனால் தென் மாவட்டங்களில் இருந்து மேற்கண்ட பகுதிகளுக்கு ரயில் வசதி கிடையாது. எனவே திருநெல்வேலியில் இருந்து வேளாங்கண்ணி அதி விரைவு ரயிலை மதுரை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை வழியாக தினசரி காலையில் இயக்க வேண்டும். அதே நேரத்தில் மறு மார்க்கத்தில் மதியம் வேளாங்கண்ணியில் இருந்து - திருநெல்வேலிக்கு ரயிலை இயக்கி இரவு திருநெல்வேலி சென்றடைய செய்ய வேண்டும்.

கொரோனா காரணத்தால் நிறுத்தப்பட்ட பெங்களூர் காரைக்கால் பயணிகள் ரயிலை விரைவு ரயிலாக பகலில் அல்லது இரவில் மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், நெய்வேலி, விருத்தாச்சலம், சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக தினசரி இயக்க வேண்டும். தஞ்சை காரைக்கால் வரை இரட்டை ரயில் பாதை பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags : Nellai ,Karaikal ,
× RELATED நெல்லை மக்களவை தொகுதி பாஜ, அதிமுக வேட்பாளர்கள் சொத்து பட்டியல்