காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணை திறக்கும் தேதியை அறிவிக்க வேண்டும்: நாகை குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

நாகை, மே 20: நாகை ஆர்டிஓ அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆர்டிஓ முருகேசன் தலைமையில் நேற்று நடந்தது.

இதில் விவசாயிகள் பேசியதாவது:

ராம்தாஸ்: காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 1ம் தேதியே தண்ணீர் திறக்க வேண்டும். மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. முன் தேதியிட்டு தண்ணீர் திறந்தால் பருவம் தவறி பெய்யும் மழையால் பயிர் பிழைத்து கொள்ளும். ராஜேந்திரன்: காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் தேதியை அறிவிக்க வேண்டும். விவசாயிகளிடம் பணம் இல்லை.

எனவே அணை திறப்பு தேதியை முன்னதாக அறிவித்தால் விவசாயிகள் நடவுகளுக்கு தேவையான பணிகளை தொடங்க வசதியாக இருக்கும். கால்நடை தீவனங்களில் கலப்படம் அதிகமாக இருப்பதால் கால்நடைகளுக்கு அதிக அளவில் நோய்கள் வருகிறது. எனவே ஆவின் நிறுவனம் மூலம் தரமான கால்நடை தீவனங்களை விநியோகம் செய்ய வேண்டும். வேளாண்மை துறை மூலம் 100 சதவீதம் முளைப்பு திறன் கொண்ட விதைகளை போதுமான அளவிற்கு இருப்பு வைக்க வேண்டும்.

பாபுஜி: குறுவை சாகுபடி பணி டெல்டா மாவட்டங்களில் தொடங்கப்படவுள்ளது. இதற்கு தேவையான உரம், விதை ஆகியவற்றை போதுமான அளவிற்கு இருப்பு வைக்க வேண்டும். வேளாண்மை துறை மூலம் விநியோகம் செய்யும் விதைகளை நம்பி வாங்க முடியவில்லை. எனவே 100 சதவீதம் முளைப்பு திறன் கொண்ட விதைகளை விநியோகம் செய்ய வேண்டும். கதவணைகள், மதகுகள் ஆகியவற்றை சீர் செய்து வைக்க வேண்டும். விவசாயிகளுக்கு 25 சதவீத மானியத்தில் விதைகள் வழங்க வேண்டும்.

அப்துல்கலாம்: திருப்பனையூர் தலைப்பு வாய்க்கால் தூர் வார வேண்டும்.

முஜீபுஷரீக்: அரிச்சந்திரன் ஆறு ராஜன் வாய்க்கால் கதவணை கட்ட வேண்டும். இல்லையெனில் கடல் நீர் உட்புகுந்து எல்லா தண்ணீரும் உப்புநீராக மாறி விடும். காமேஸ்வரம் முதல் வேட்டைகாரனிருப்பு வரை நெடுஞ்சாலை துறை மூலம் கட்டிய பாலங்கள் அனைத்தும் சேதம் அடைந்து விட்டது. கோயில்பத்து கொள்முதல் நிலையத்தில் போதுமான பாதுகாப்பு வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

Related Stories: