திருக்கோவிலூர் அருகே சிறுமி பலாத்கார முயற்சி: முதியவருக்கு 5 ஆண்டு சிறை

விழுப்புரம், மே 20: கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே ஆளூர் கிராமத்தை சேர்ந்தவர் குப்பன் மகன் சண்முகம் (59), விவசாயி. இவர், கடந்த 2018ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமியிடம், பணம் கொடுத்து, கடையில் வெற்றிலை வாங்கி வர கூறியுள்ளார். சிறுமி சென்ற போது சண்முகம் பின்னால் சென்று திடீரென அவரை தூக்கி கொண்டு சென்றார். சிறுமி கதறி அழுததை அறிந்து பெற்றோர் கூச்சலிட்டு பின் தொடர்ந்ததை அறிந்த முதியவர், அங்குள்ள முட்புதரில் சிறுமியை வீசிவிட்டு சென்றார்.

இதுகுறித்து திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து சண்முகத்தை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட சண்முகத்துக்கு, 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1.25 லட்சம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிபதி சாந்தி தீர்ப்பளித்தார்.

இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும், 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து, சிறை தண்டனை விதிக்கப்பட்ட சண்முகம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: