×

வில்லியனூர் அருகே பரபரப்பு வாலிபருக்கு சரமாரி கத்தி குத்து

வில்லியனூர்,  மே 20: புதுச்சேரி, வில்லியனூர் அருகே உள்ள  கோபாலன்கடை, அம்மா நகரைச் சேர்ந்தவர் மணி (28). இவர் மருந்து விற்பனை  பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்தாண்டு திருமணம்  நடந்தது.  இவரது மனைவி சவுதி நாட்டில் நர்சாக வேலை செய்கிறார்.  நேற்று  முன்தினம் இரவு 12.30 மணியளவில் மணி தனது வீட்டின் முன்பு நின்று கொண்டு  வெளிநாட்டில் உள்ள தனது மனைவியுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியை சேர்ந்த ரவுடியான சதீஷ் (20), குமார் என்கிற கலைகுமார்  (22), ஜெயபிரகாஷ் (22) மற்றும் 2 பேர் பைக்கில் வந்து மணியிடம் இருந்த  செல்போனை பறித்துக் கொண்டு அவரை கத்தியால் தலை மற்றும் கையில் வெட்டி கொலை  முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து மணி அக்கும்பலிடமிருந்து தப்பிக்க  கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.
 
இதையடுத்து சதீஷ் தலைமையிலான  5 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது. பின்னர் தலை மற்றும்  கையில் பலத்த காயமடைந்த மணியை மீட்டு பொதுமக்கள் அவரை உடனே புதுச்சேரி  அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில்  ேசர்க்கப்பட்ட மணிக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து  வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் உடனடியாக வில்லியனூர்  காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், எஸ்ஐ  முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு  விசாரணை மேற்கொண்டனர்.  
 
பின்னர் 5 பேர் கும்பல் மீது கொலை முயற்சியில்  ஈடுபடுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் வழக்குபதிந்த போலீசார் தலைமறைவான  ரவுடி கும்பலை தேடி வருகின்றனர். இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான சிறப்பு  அதிரடிப்படையும் விசாரணையில் இறங்கியுள்ளது. விசாரணையில், ஏற்கனவே அம்மா  நகரில் சதீஷ் மற்றும் அப்பு தரப்பு தனித்தனி கோஷ்டியாக செயல்பட்டு  வந்துள்ளது. கடந்தாண்டு இருதரப்பும் கொலை முயற்சியில் ஈடுபட்டு வில்லியனூர்  மற்றும் மேட்டுப்பாளையம் காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி  குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
 தற்போது  அக்கும்பல் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.  மீண்டும் முன்விரோதம் காரணமாக  இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இதனிடையே மணியை தாக்கிய ரவுடி கும்பலைச் சேர்ந்த 3 பேர் போலீசிடம் சிக்கியுள்ளனர்.

Tags : Villianur ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி