×

யூ டியூப் சேனல் அவதூறு நடவடிக்கை கோரி எஸ்பியிடம் தங்கதமிழ்ச்செல்வன் புகார்

தேனி, மே 20: தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வன், தேனி மாவட்ட எஸ்.பி பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் சட்டமன்ற உறப்பினராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்து மக்கள் பணியாற்றியுள்ளேன். கடந்த 17ம் தேதி ‘தமிழ் ட்ரீட்’ என்ற யூ டியூப் சேனலில் முகப்பு பக்கத்தில் ‘திமுகவின் முதுகில் குத்திய தங்கதமிழ்ச்செல்வன்’ என தலைப்பிட்டு 3.5 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில், நான் மாநிலங்களவை உறுப்பினராக பதவியை எதிர்பார்த்து காத்திருந்ததாகவும், கட்சித் தலைமை மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்காததால், நான் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக கூறியுள்ளனர்.

அதன்காரணமாக நான் திமுகவை விட்டு திடீரென விலகிவிட்டதாக ஒரு உண்மைக்கு புறம்பான தவறான செய்தியை அடிப்படை ஆதாரமும் இல்லாமல் தெரிவித்துள்ளனர். அரசியல் வாழ்க்கையில் எனக்குள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி அவதூறு ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு செய்தி வெளியிட்டுள்ளனர். எனவே, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இம்மனு மீது உரியநடவடிக்கை எடுத்து, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி என் மீது பொய்யான அவதூறு செய்தியை பரப்பிய யூடியூப் சேனல் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Thangathamilchelvan ,SP ,YouTube ,
× RELATED பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க...