×

பலத்த காற்று வீசுவதால் பாம்பனில் 100 அடிக்கு உள்வாங்கிய கடல்

ராமேஸ்வரம், மே 20:  பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் கடந்த மூன்று நாட்களாக பலத்த காற்று வீசி வருதுடன் கடலும் கொந்தளிப்பாக காணப்படுகிறது. இதனால் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன் பகுதியில் கடல் சீற்றமாக உள்ளதால் நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த மூன்று நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வில்லை. கரைவலை, சிறுபடகில் மீன்பிடிக்கும் மீனவர்களும் மீன்பிடிக்க செல்லாமல் வீட்டிற்குள் முடங்கினர்.

மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் ராமேஸ்வரம் கரையூர், சேரான்கோட்டை, முகுந்தராயர் சத்திரம், தனுஷ்கோடி, ஓலைக்குடா, வடகாடு, தங்கச்சிமடம், பாம்பன் மற்றும் மண்டபம் பகுதியில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் மார்க்கெட்டில் கூட மீன் விற்பனை முற்றிலும் குறைந்துள்ளது.

கடலில் பலத்த காற்று வீசி வரும் நிலையில் பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் நேற்று கரையில் இருந்து சுமார் நூறு அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் தரைதட்டி நின்றது. ஆண்டு தோறும் இந்த சீசனில் ராமேஸ்வரம், வடகாடு, பாம்பன் சின்னப்பாலம், வடக்கு கடற்கரை பகுதியில் இதுபோல் கடல் உள்வாங்குவது வழக்கமாக நடைபெறும் சம்பவமாக இருந்தாலும், இக்காலத்தில் படகுகளை கடலில் செலுத்த முடியாத சூழ்நிலையும் உருவாகிறது. இதனால் மீனவர்களின் மீன்பிடித் தொழில் நிலை கருதி பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் நாட்டுப்படகுகளை நிறுத்துவதற்கு தூண்டில் வளைவு ஏற்படுத்திதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Pamplona ,
× RELATED ஸ்பெயினில் நடைபெற்ற பாரம்பரிய சான்...