×

3-வது மண்டலத்திற்கு உட்பட்ட 15 வார்டுகளில் விரைவில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு: கூட்டத்தில் மண்டல தலைவர் பேச்சு

திருப்பூர்,மே20: திருப்பூர் மாநகராட்சி 3வது மண்டல கூட்டமானது மண்டல தலைவர் கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்றது. இதில்மாநகராட்சி உதவி ஆணையர் வாசு குமார் கலந்து கொண்டார். கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் பேசியதாவது: 58,59 மற்றும் 60 வார்டுக்கு வீரபாண்டி  குடிநீர் இணைப்பில் இருந்து 15 லட்சம் லிட்டர் தண்ணீரும், நல்லூர்  இணைப்பில் இருந்து 15 லட்சம் லிட்டர் தண்ணீரும் கோயில் வழியில் இருந்து 8 லட்சத்து 70 ஆயிரம் லிட்டர் தண்ணீரும் 3வது குடிநீர் திட்டத்தின் மாநகராட்சி நிர்வாகம் மூலமாக தரப்படுகிறது.

ஆறு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்கலாம். ஆனால் தற்போது வரை 12 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வழங்கப்படுகிறது. எனவே உரிய முறையில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குப்பைத்தொட்டிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.தெருவிளக்கு மற்றும் சாக்கடை கால்வாய் வசதி மிகவும் பழுதடைந்து காணப்படுவதால் ஆங்காங்கே சாக்கடை அடைப்பு ஏற்பட்டு சாலை நடுவே கழிவுநீர் தேக்கம் அடைந்துள்ளது. மேலும் சாலையை தரமாக அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தண்ணீர் பற்றாக்குறையை வைத்து கொண்டு அதிகாரிகளிடம் விவாதம் செய்வது சரியல்ல, முதலில் மேயர் மற்றும் அமைச்சர், மண்டல அதிகாரிகள் கலந்து ஆலோசித்து. திருப்பூர் மாவட்டத்திற்கு மொத்த கொள்ளளவு தண்ணீர் எவ்வளவு, தற்போது தண்ணீர் வரத்து அளவு என்ன என்ற விவரத்தை அறிந்து கொண்டு மேற்கொண்டு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்றுத் தர வேண்டும். அப்போதுதான் தண்ணீர் பற்றாக்குறையும் பிரச்னையை தீர்க்கமுடியும். இவ்வாறு மண்டலக் கூட்டத்தில் விவாதம் செய்யப்பட்டது. இதன் பின்னர் மண்டல தலைவர் கோவிந்தசாமி பேசுகையில்: திருப்பூர் 3வது மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட 15 வார்டுகளுக்கு மட்டும் சுமார் 222 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட உள்ளது.
விரைவில் குடிநீர்,தார்சாலை,தெருவிளக்கு,சாக்கடை கால்வாய் வசதிகள் ஆகிய பணிகளை மேற்கொள்ள உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிநீர் குழாய் உடைப்பு, போர்வெல் மற்றும் குடிநீர்தொட்டி ஆகியவை சரி செய்திட ரூ.1.20 கோடி தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. பணிகள் நடைபெற தொடங்கியுள்ளதால் வார்டுகளில் உள்ள குடிநீர் பிரச்னைகள் விரைவில்  தீர்வு காணப்படும்.  இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Zonal ,
× RELATED மண்டலக்குழு தலைவர், கவுன்சிலர்...