சுற்றுலாத்துறை சார்பில் ஊட்டி படகு இல்லத்தில் படகு போட்டி

ஊட்டி, மே 20: கோடை விழாவின் ஒருபகுதியாக சுற்றுலாத்துறை சார்பில் ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் பங்ேகற்ற படகு போட்டிகள் நடைபெற்றன.  ஊட்டியில் ஆண்டு தோறும் கோடை காலத்தின் போது குளு குளு காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். சுற்றுலா பயணிகளை கவருவதற்காக, மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை ஆகியவை சார்பில் பல்வேறு கண்காட்சிகள், பொழுது போக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான கோடை சீசன் களை கட்டி உள்ள நிலையில் கடந்த 7ம் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் ‘கோடை விழா 2022’ துவங்கியது. 13ம் தேதி துவங்கி கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி, 14,15 ஆகிய தேதிகளில் ஊட்டியில் ரோஜா கண்காட்சி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான நூற்றாண்டு புகழ்பெற்ற மலர் கண்காட்சி இன்று அரசு தாவரவியல் பூங்காவில் துவங்குகிறது.

இந்நிலையில், சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் பங்கேற்ற படகு போட்டிகள் நடந்தது. ஆண்கள், பெண்கள், தம்பதிகள், துடுப்பு படகு ஓட்டுபவர்கள் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். ஆண்கள் பிரிவில் ஊட்டியை சேர்ந்த பிரான்சிஸ், கார்த்திக் ஜோடி முதலிடத்தையும், அம்ரித், கார்த்திக் ஜோடி 2ம் இடத்தையும், அமர்நாத், கார்முகில் ஜோடி 3வது இடத்தையும் பிடித்தது.

தம்பதிகளுக்கான பிரிவில் கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த பானுபிரியா, உமேஷ் ஜோடி முதலிடம் பிடித்தது. பூனேவை சேர்ந்த ஸ்ரீகணேஷ், ருக்குஜா தம்பதி 2ம் இடமும், ராஜபாளையத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன், சித்ராதேவி தம்பதி 3வது இடமும் பிடித்தது.

மகளிர் பிரிவில் ஊட்டியை சேர்ந்த திரேசா, நந்தினி முதலிடமும், ஊட்டியை சேர்ந்த ப்ரீத்தி, கவுசல்யா 2வது இடமும், சென்னையை சேர்ந்த ஸ்வப்னா, லட்சிதா ஆகியோர் 3ம் இடமும் பிடித்தனர். துடுப்பு படகு பிரிவில் ராம்குமார் முதலிடமும், ஊட்டியை சேர்ந்த ஜார்ஜ் 2ம் இடமும், ஊட்டியை சேர்ந்த கமலக்கண்ணன் 3ம் இடமும் பிடித்தனர். இதைத்தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் வெங்கடேசன், மாவட்ட சுற்றுலா அலுவலர் உமா சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: