×

நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் அருகே புதிய ரவுண்டானா: அதிகாரிகள் மீண்டும் ஆய்வு

நாகர்கோவில், மே 20: நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் அருகே புதிய ரவுண்டானா அமைக்க ஆய்வு பணிகள் நேற்று நடைபெற்றது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள கே.பி. ரோட்டில் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் வந்துள்ளன. ஏற்கனவே இந்த பகுதி கடுமையான போக்குவரத்து நெருக்கடியான சாலை ஆகும். இந்த சாலையில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில், டெரிக் சந்திப்பு பகுதியில் இருந்து வேட்டாளி அம்மன் கோயில் வரை  ரூ.1.5 கோடியில் சாலை விரிவாக்க பணிகள் நடந்தன. இதற்காக கலெக்டர் அலுவலக சந்திப்பில் இருந்த போக்குவரத்து சிக்னல் அகற்றப்பட்டு, பணிகள் நடந்தது. இந்த சாலையில்  இருந்த பழமையான மரங்களையும் வெட்டி அகற்றினர்.

சாலை விரிவாக்க பணிகள் முடிவடைந்த பின்னரும், போக்குவரத்து நெருக்கடி குறைந்தபாடில்லை. இப்பகுதியில் சாலை விரிவாக்கம் முடிவடைந்ததும் மூன்று சாலைகள் மற்றும் சற்குணவீதி செல்லும் தெரு இணையும் சந்திப்பில் ரவுண்டானா அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. நீண்டகாலம் இதற்கான பணிகள் தொடங்கப்படாத நிலையில் தற்போது ரவுண்டானா அமைக்கும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக கலெக்டர் அலுவவலக வளாகத்தில் உள்ள இடப்பகுதி ஒப்படைக்கப்பட்டுள்ளது. மதில் சுவர் இடிக்கப்பட்டு சாலை அகலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ரவுண்டானா விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. தற்போதுள்ள ஐலண்ட் கட்டமைப்பு மாற்றப்பட்டு வட்ட வடிவில் ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மதன்குமார், ஜெகன் ஆகியோர் நேற்று ஆய்வில் ஈடுபட்டனர்.

மூன்று சாலைகளும் ரவுண்டானாவுடன் இணையுமிடத்தில் இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கும். இதன் மூலம் எல்லா சாலைகளிலும் தங்குதடையின்றி வாகன போக்குவரத்து நடைபெறும். அதே வேளையில் பாதசாரிகளுக்காக கலெக்டர் அலுவலகம் எதிரில், வடசேரி செல்லும் சாலை, செட்டிக்குளம் செல்லும் சாலையில் ரவுண்டானாவையொட்டி குறுக்காக நடைபாதை அமைக்கப்படும். சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள்ள இடம் முழுமையாக இந்த ரவுண்டானாவுக்கு பயன்படுத்தப்பட்டு சாலையோரத்தில் வடிகால்களும் கட்டப்படும். ரவுண்டானா பயன்பாட்டிற்கு வந்த பின்னர் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Nagercoil ,
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு