×

பொதுப்பணித்துறையின் 610 குளங்களில் வண்டல் மண் எடுக்கலாம்: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தகவல்

நாகர்கோவில், மே 20: குமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் 610 குளங்களில் வண்டல் மண் எடுக்கலாம், இது தொடர்பான பட்டியல் மே மாத அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது என்று கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் தெரிவித்தார். குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அரவிந்த் தலைமையில் நேற்று  நடைபெற்றது.   பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் வசந்தி, வேளாண்மை இணை இயக்குநர் சத்தியஜோஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வாணி,  பாசனத்துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ,  விவசாயிகள் புலவர் செல்லப்பா, முருகேசபிள்ளை, செண்பகசேகரபிள்ளை, விஜி, தங்கப்பன், பத்மதாஸ், தேவதாஸ், பொன்னுலிங்க ஐயன், ஹோமர்லால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் ‘குமரி இதழ்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. விவசாயிகள் நலன் கருதி இந்த இதழ் தொடர்ந்து வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். குறைந்தபட்சம் கன்னிப்பூ, கும்பப்பூ சாகுபடி காலத்தில் வெளியிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் யூரியா உரம் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனை பயன்படுத்தி அதிக விலைக்கு தனியார் விற்கின்றனர். ஒவ்வொரு கடையிலும் ஒரு  விலைக்கு யூரியா விற்பனை செய்யப்படுகிறது என விவசாயிகள் குற்றம்சாட்டினர். இதற்கு பதில் அளித்த கலெக்டர், அதிக விலைக்கு யூரியா உரம் விற்றால் சம்பந்தப்பட்ட கடைகள் சீல் வைக்கப்படும். எந்த கடை என புகார்களை குறிப்பிட்டு தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

மேலும் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பில் ஆக்ரமிப்பு அகற்றம் தொடர்பாக புகார்கள் அதிகம் வருகிறது.  தனிப்பட்ட முறையில் உள்ள புகார்களை தெரிவிக்காமல் முக்கியத்துவம் வாய்ந்த புகார்களை தெரிவிக்கலாம். முன்னுரிமை அடிப்படையில் ஆக்ரமிப்பு அகற்றப்படும் எனவும் கலெக்டர் பதில் அளித்தார். பத்மநாபபுரம் சப் கலெக்டர் அலுவலகத்தில் ஆக்ரமிப்புகள் அகற்றம் தொடர்பாக நடத்தப்படுகின்ற கூட்டம் கூட்டப்படவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டினர். இந்த கூட்டத்தை முறையாக கூட்ட வேண்டும் என்றும், இவ்வாறு கூட்டம் நடத்தி ஆலோசிப்பதால் ஆக்ரமிப்பு அகற்றம் தொடர்பான பணிகள் எளிதாகும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

கிள்ளியூர் வேளாண்மை துறை அலுவலகத்தில் பணியாளர் ஒருவர்  அலுவலகம் செல்லும் விவசாயிகளை தரக்குறைவாக பேசியதை கலெக்டரிடம் புகார் அளித்த காரணத்தால் இது தொடர்பாக அவர் தனது கடைக்கு வந்து மோசமான வார்த்தைகளை பேசி சென்றார் என விவசாயி ஒருவர் புகார் அளித்தார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இரணியல் அருகே உள்ள ஐக்கினா குளத்தில் ஆக்ரமிப்பு அகற்ற வேண்டும், குளத்தில் கழிவு நீர் கலக்கிறது என புலவர் செல்லப்பா குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளித்த கலெக்டர்,  குளங்கள் கால்வாய்களில் வீட்டு கழிவுநீர் கலக்க அனுமதிக்க கூடாது, சாலையோர வடிகால் என்பது மழை நீர் பாய்வதற்கு கட்டப்பட்டுள்ளது, வீடுகளில் உள்ள கழிவுநீர் பாய்வதற்கு அல்ல, பேரூராட்சிகளுக்கு இதனை அறிவுறுத்தியுள்ளோம். அவ்வாறு கழிவுநீர் வரும் இடத்தில் காங்கிரிட் கொண்டு அடைக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

 இரட்டை ரயில்பாதை பணிகளுக்காக சானல்களில் உள்ள பாலம் உயரம் அதிகரிக்கப்படாமல் இருக்க வேண்டும், இதனை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் ரயில்பாதை பணிகள் செப்டம்பரில் நிறைவு பெற்றுவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் அதன்பிறகு சாகுபடி பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் கலெக்டர் தெரிவித்தார். விவசாயிகள் சுற்றுலா திட்டத்தில் ஒரே விவசாயிகளே மீண்டும் மீண்டும் அனுப்பி வைக்கப்படுகின்றனர். புதிய விவசாயிகளை அனுமதிப்பதில்லை என்று புகார் எழுந்தது.

இது ெதாடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். குமரி மாவட்டத்தில் கிராமம் வாரியாக விவசாயிகள் வண்டல் மண் எடுக்க உரிய அனுமதி பெற குளங்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என்று விவசாயி தேவதாஸ் கோரிக்கை வைத்திருந்தார். குளங்களில் வண்டல் மண் எடுப்பது தொடர்பாக குமரி மாவட்ட அரசிதழில் பொதுப்பணித்துறை சார்ந்த 610 குளங்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பேரூராட்சிக்கு சொந்தமான குளங்கள் அடுத்த பட்டியலில் இடம்பெறும். ஒன்றிய அளவில் உதவி இயக்குநர், வேளாண்மை துறை அதிகாரியிடம் மனு அளிக்க வேண்டும். இது தொடர்பாக உரிய படிவம் மற்றும் வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் இது தொடர்பாக விண்ணப்பிக்கலாம் என்று கூட்டத்தில் கலெக்டரால் தெரிவிக்கப்பட்டது. பத்திரபதிவுத்துறை நீர்நிலைகளை முறைகேடாக பதிவு செய்து இருக்கும் பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும் என்று வின்ஸ் ஆன்றோ கோரிக்கை வைத்தார். இது தொடர்பாக திருவட்டார் தாசில்தார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டார்.

‘பேச்சிப்பாறை அணை தூர்வாரப்படும்’
விவசாயி ஹோமர்லால், பேச்சிப்பாறை அணையை தூர்வார வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இது தொடர்பாக பொதுப்பணித்துறை அளித்த பதிலில் பேச்சிப்பாறை அணையை தூர்வார மதிப்பீடு ரூ.5.12 லட்சம் மற்றும் வருவாய் மதிப்பீடு வருமானம் ரூ.1 கோடி 9 லட்சத்து 46 ஆயிரத்தில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அணை தூர்வாரும் பகுதிகள் வன உயிரின சரணாலயம் பகுதியில் வருவதால் வனத்துறை அனுமதி பெற வேண்டியுள்ளது, அரசின் அனுமதி பெற்று தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த கலெக்டர், ‘பேச்சிப்பாறை அணை தூர்வார வனத்துறை அனுமதி பெறுவது என் பொறுப்பு’ என்றார்.

‘ஏவிஎம் கால்வாய் தூர்வார ரூ.4 கோடியில் மதிப்பீடு’
குளச்சல் முதல் மண்டைக்காடு புதூர் வரை உள்ள ஏவிஎம் கால்வாயை தூர்வாரி சீர் செய்து ஆக்ரமிப்பு அகற்ற ரூ.4 கோடியில் மதிப்பீடு தயாரித்து  அரசுக்கு அனுப்பி ைவக்கப்பட்டுள்ளது. அரசிடம் இருந்து நிர்வாக ஒப்புதல் பெற்ற உடன் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் பதில் அளித்தனர்.

கல்குவாரிகளுக்கு தடை வருமா?
மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க கல்குவாரிகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு, ‘குமரி மாவட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் ஆணையின்படி 5 நபர்களுக்கு பட்டா நிலத்தில் கல்குவாரிகளும், கிள்ளியூர் மற்றும் நட்டாலம் கிராமத்தில் பட்டா நிலத்தில் இரு நபர்களுக்கு கல்குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்று புவியியல் மற்றும் சுங்கத்துறை துணை இயக்குநரால் பதில் அளிக்கப்பட்டது. அதே வேளையில் மேற்கு தொடர்ச்சி மலையில் கல்குவாரிகள் இயங்க அனுமதிக்க கூடாது, இது தொடர்பாக ஏற்கனவே உத்தரவுகள் உள்ளது என்றும் வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார்.

Tags : Public Works Department ,Farmers Complaints Day ,
× RELATED பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள...