திருவள்ளூர் அருகே திருமண மண்டபத்தில் பட்டாக்கத்தியுடன் தங்கியிருந்த பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகர் உட்பட 5 பேர் கைது: 2 கத்திகள் பறிமுதல்

திருவள்ளூர், மே  20: திருவள்ளூர் அருகே திருமண மண்டபத்தில் பட்டாக்கத்தியுடன் தங்கியிருந்த பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் உள்ள கெஸ்ட் ஹவுஸில் மர்மநபர்கள் தங்கியிருப்பதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமாருக்கு தகவல் கிடைத்தது.

உத்தரவின் பேரில் திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையில் தாலுகா இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேஷ், சக்திவேல், இன்ஸ்பெக்டர் இளங்கோ, சுரேஷ் மற்றும் போலீசார் நேற்று  தனியார் திருமண மண்டபத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திருமண மண்டபத்தில் உள்ள கெஸ்ட் ஹவுஸில் உள்ள அறையில் 5 பேர் கொண்ட மர்ம நபர்கள் பட்டாக்கத்தியுடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மணவாள நகர் போலீசார் 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2 பட்டாகத்தியை பறிமுதல் செய்தனர்.

பிறகு அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய திருநின்றவூர், திருவேங்கடம் நகர் பகுதியைச் சேர்ந்த ஜோசப் (எ) தேவகுமார் (35), புட்லூர் பகுதியை சேர்ந்த மோகன் பிரபு (23), புது இருளன்சேரி பகுதியைச் சேர்ந்த அபினாஷ் (19),  நயப்பாக்கம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் (30), மப்பேடு பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த டில்லிபாபு (27) என்பது தெரியவந்தது. இவர்கள் 5 பேரையும் ஒண்டிகுப்பம் பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள்  அழைத்து வந்து தங்க வைத்தது தெரியவந்தது. எதற்காக இங்கு வந்து தங்கியிருந்தார்கள் என்றும், யாரைக் கொலை செய்ய திட்டம் தீட்டினார்கள் என்றும் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து போலீசார் 5 பேரையும் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: