×

பின்னலாடை துறையினர் ஒன்றிய அமைச்சருடன் சந்திப்பு

நூல் விலை உயர்வால் பாதிப்பு

திருப்பூர், மே 19:  அபரிமிதமான நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி அனைத்து பின்னலாடை தொழில் கூட்டமைப்பு சார்பில் கடந்த 16, 17ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் அனைத்தும் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த நிலையில் ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் அழைப்பின் பேரில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம், கோவையை சேர்ந்த நூற்பாலை அதிபர்கள், பஞ்சு வியாபாரிகள் கொண்ட குழுவினர் டெல்லி சென்றனர். ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து பஞ்சு, நூல் விலை உயர்வால் ஜவுளித்துறை எதிர்கொண்ட சிரமங்கள் குறித்து விளக்கி கூறினார்கள். இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் கூறியதாவது: நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த பஞ்சு, நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. உள்நாட்டு தேவைக்கு தடையின்றி பஞ்சை வழங்க வேண்டும். உள்நாட்டில் பின்னலாடை துறையினருக்கு தேவை இருக்கும் பட்சத்தில், இங்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்திவிட்டு, பஞ்சை பதுக்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடாது.

பஞ்சு, நூல் உள்நாட்டு ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு கிடைக்கச்செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கோதுமையை போல் பஞ்சு, நூல் ஏற்றுமதிக்கு தடைவிதிக்கும் சூழ்நிலை ஏற்படும் என்று பஞ்சு வியாபாரிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார். அதுபோல் காட்டன் கவுன்சில் என்ற பெயரில் புதிய அமைப்பை ஏற்படுத்தி, இந்தியாவில் பருத்தி உற்பத்தி முதல் நூற்பாலைகள், பின்னலாடை துறையினருக்கு பஞ்சு, நூல் கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து கண்காணித்து தீர்வு காணும். உடனடியாக இந்த கவுன்சில் செயல்பட ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து பஞ்சை இறக்குமதி செய்வதற்கான வரி வருகிற செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை ரத்து செய்யப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு என்பது இந்தியாவுக்குள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் வந்து சேரும் பருத்திக்கே வரி ரத்து என இருந்தது. அதை நீட்டிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, வருகிற செப்டம்பர் 30ம் தேதி வரை வெளிநாட்டில் பஞ்சை கப்பலில் ஏற்றும் பஞ்சுக்கும் வரி ரத்து அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு 30 சதவீத வங்கிக்கடன் அளிக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் சிறு, குறு நிறுவனங்களாக உள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு கூடுதலாக வங்கிக்கடன் வசதி அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Union Minister ,Knitting ,
× RELATED கடந்த 10 ஆண்டுகளில் கிருஷ்ணகிரி பாஜக...