டீசல் விலையை குறைக்க கோரி முதல்வருக்கு மனு

அருப்புக்கோட்டை, மே 19: விருதுநகர் மாவட்டத்தில் 140 தனியார் பேருந்துகள் உள்ளது. இந்த பேருந்துகளை இயக்க டிரைவர், நடத்துநர், பராமரிப்பு பணியாளர்கள் என உள்ளனர். தற்போது நாளுக்கு நாள் அதிகரிக்கும் டீசல் விலை உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு ஆகிய காரணத்தால் போக்குவரத்து தொழிலை நடத்த பெரும் சிரமமாக உள்ளது. எனவே, டீசல் விலை உயர்வை குறைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விருதுநகர் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்க செயலாளர் பி.டி மகாலிங்கம் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 100 வருடங்களாக போக்குவரத்து தொழில் செய்து வருகிறோம். தற்போது நாளுக்கு நாள் அதிகரிக்கும் டீசல் விலை உயர்வு, உதிரிபாகங்கள் விலை உயர்வு மற்றும் ஊழியர்களின் சம்பள உயர்வு, போன்ற காரணத்தால் தொடர்ந்து தொழில் நடத்த பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் சுமார் 4,500 தனியார் பேருந்துகளை நம்பி உள்ள தொழிலாளர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்களின் குடும்பங்கள் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியோ, அல்லது டீசல் விலையை குறைத்தோ, நலிந்துவரும் போக்குவரத்து தொழிலை மேம்படுத்தி அதனை நம்பியுள்ள தொழிலாளர்களின் குடும்பங்களையும் மற்றும் பஸ் உரிமையாளர்களையும் பாதுகாக்க வேண்டுமென கூறினார். இதுகுறித்து முதல்வர் மற்றும் போக்குவரத்து அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.

Related Stories: