×

திராவிட கட்சிகள் தயவில்லாமல் தமிழகத்தில் தேசிய கட்சிகள் காலூன்ற முடியாது செல்லூர் ராஜூ எம்எல்ஏ பேட்டி

மதுரை, மே 19: மதுரை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட தாராபட்டி, கீழமாத்தூர், துவரிமான் பகுதிகளில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.37 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட பணிகளைசெல்லூர் ராஜூ நேற்று துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘தொண்டர்களை பாதுகாத்து கொள்ளவும், கட்சி வளர்ச்சி அடைவதற்காகவும் பாஜக தலைவர் அண்ணாமலை விரைவில் ஆட்சி அமைப்போம் எனக்கூறி வருகிறார். இது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும். ஆனால் தமிழகத்தில் திராவிட கட்சிகளின் தயவில்லாமல் தேசிய கட்சிகள் காலூன்ற முடியாது. அம்மா கிளினிக்குகளில் ஏதேனும் மாறுதல் செய்து, திட்டம் தொடர வேண்டும். மதுரை தெப்பக்குளத்தில் மின்னொளி அமைத்து மக்கள் பொழுதுபோக்கு இடமாக மாற்ற வேண்டும்’ என்றார்.

பல்கலை.யில் கருத்தரங்கம்
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலை நிலை கல்வி பொது நிர்வாகத்துறை, தமிழக அரசின் கூட்டுறவு மேலாண்மை துறை இணைந்து மின் ஆளுகையை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பயனுள்ள வகையில் பயன்படுத்துவது குறித்த 2 நாள் கருத்தரங்கம் நேற்று துவங்கியது. பல்கலைக்கழக பதிவாளர் (பொ) சிவக்குமார், பேராசிரியர் பிரபாகரன், கூட்டுறவு சங்க மண்டல இணை பதிவாளர் குருமூர்த்தி, தொலை நிலை கல்வி இயக்குநர் (பொ) ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பல்கலைக்கழக துணை வேந்தர் குமார் தலைமையுரையாற்ற, மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் சிறப்புரையாற்றினார். இதில் கூட்டுறவு துறை அலுவலர்கள் 200 பேர் கலந்து கொண்டனர்.

மண்டையை உடைத்த மகன் கைது
திருமங்கலம் அருகே கப்பலூர் காந்தி நகரை  சேர்ந்தவர் ஜெகநாதன் (65). டெய்லர். இவரது மகன் ஜீவா (35). இவருக்கு  திருமணமான நிலையில் கடந்த 6 மாதமாக மனைவியை பிரித்து வசித்து வருகிறார்.  இதனால் ஜீவா தனது பெற்றோருடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். நேற்று  முன்தினம் தந்தை ஜெகநாதனுக்கும், ஜீவாவுக்கும் குடும்பதகராறு எழுந்துள்ளது.  ஆவேசமடைந்த ஜீவா கட்டையை எடுத்து ஜெகநாதனை சரமாரியாக தாக்கியுள்ளார்.  இதில் அவரது மண்டை உடைந்தது. அக்கம்பக்கத்தினர் மீட்டு ஜெகநாதனை  திருமங்கலம் ஜிஹெச்சில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரில் திருமங்கலம் டவுன்  போலீசார் வழக்குப்பதிந்து ஜீவாவை கைது செய்தனர்.

வக்கீலுக்கு கொலை மிரட்டல்
மேலூரை சேர்ந்தவர் வக்கீல் மனோஜ்குமார் (40).  இவர் நேற்று மேலூர் போலீசில் புகார் மனு அளித்தார். அதில், ‘மதுரை கேகே  நகரை சேர்ந்த மனோகரன் மகள் ஜெயஅபிராமிக்கும், அவரது கணவர் மேலூர்  ஆட்டுக்குளத்தை சேர்ந்த குமரேசன் மகன் ராஜேஷ் கண்ணாவிற்கும் திருமணமாகி  உள்ளது. பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து  கேட்டு மதுரை குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு நடந்து  வருகிறது. இந்நிலையில்  தனது மனைவி விவாகரத்து கோருவதற்கு தான்தான் காரணம் என கூறி போனில் கொலை மிரட்டல் விடுக்கிறார். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என  கூறியிருந்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து  வருகின்றனர்.

பணி நியமன ஆணை வழங்கல்
இந்து சமய அறநிலையத்துறையில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த தற்காலிக ஊழியர்களுக்கு பணி நியமன ஆணை வழஙகப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் 110 விதியின் கீழ் அறிவித்தார். இதை தொடர்ந்து திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த கிருஷ்ணமூர்த்தி, சோனையம்மாள் ஆகியோருக்கு பணி நியமன உத்தரவை நேற்று கோயில் துணை ஆணையர் சுரேஷ் வழஙகினார். இதற்கு கோயில் ஊழியர்கள் சங்கம், பணியாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோயில் துணை ஆணையர் சுரேஷ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.

வீட்டு பட்டா கோரி காத்திருப்பு
வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு பூர்வீக மக்கள் விடுதலை கட்சி சார்பில் இலவச வீட்டுமனை பட்டா கோரி நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தங்கமணி தலைமை வகிக்க, மாநிலக்குழு உறுப்பபினர்கள் அனல் முருகன், மணிகண்டன், சதீஷ் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் செல்லக்கண்ணு சிறப்புரையாற்றினார். போராட்டத்தில் 10 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட மக்கள் 89 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்காததை கண்டித்து கோஷமிட்டனர். பின்னர் வாடிப்பட்டி இன்ஸ்பெக்டர் கனகசபாபதி, தாசில்தார் தனலட்சுமி பேச்சுவார்த்தை நடத்தி இலவச வீட்டுமனைபட்டா விரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். அதன்பின்பே போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

புதிய ரேஷன் கடை திறப்பு
சோழவந்தான் அருகே மேலமாத்தூர்  ஊராட்சிக்குட்பட்ட நாடார் தெருவில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட  புதிய ரேனுன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர்  அபிராமி மணிகண்டன், துணை தலைவர் காந்தி ராஜன் முன்னிலையில், செல்லூர் ராஜூ  எம்எல்ஏ திறந்து வைத்தார். தொடர்ந்து துவரிமானில் சக்தி மாரியம்மன் கோயிலை சுற்றி அமைக்கப்பட்ட மேற்கூரைகளை ஊராட்சி தலைவர் கந்தசாமி முன்னிலையில்,  எம்எல்ஏ பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.முன்னதாக கொடிமங்கலம்  ஊராட்சிக்குட்பட்ட தாராப்பட்டியில், ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிய  நிழற்குடை அமைக்கும் பணிகளை, எம்எல்ஏ பூமி செய்து துவக்கி வைத்தார்.  இதில்ல் ஜெயந்தி ராஜூ, முன்னாள் மேயர் திரவியம், ராஜா, முத்து, கருப்பணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மது விற்றவர் கைது
மேலூர் அருகிலுள்ள கம்பூர் திருவள்ளூவர் நகரை சேர்ந்தவர் ஜேசுராஜ் (52). இவர் கருங்காலக்குடியில் மது விற்பனை செய்து கொண்டிருந்த போது கொட்டாம்பட்டி போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 28 மது பாட்டில்கள், ரூ.800 பணத்தை பறிமுதல் செய்தனர்.

கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில்  பணியாற்றிய தொகுப்பூதிய- தற்காலிக பணியாளர்கள் 136 பேர் கடந்த மாதம்  பணியில் இருந்து நீக்கப்பட்டனர். கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு  போராட்டங்களில் ஈடுபட்ட இவர்கள் நேற்று முன்தினம் பல்கலைக்கழக வளாகத்தில்  மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நிர்வாகத்தின் உத்தரவின்  பேரில் போலீசார் அவர்களை கைது செய்தனர். இந்த கைது சம்பவத்தை கண்டித்தும்,  மீண்டும் பணி வழங்க வலியுறுத்தியும் நேற்று பல்கலைக்கழக வாசல் முன்பு  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். பொது செயலாளர் செல்வம், தெற்கு  வட்டக்கிளை செயலாளர் பழனிவேலு, நிர்வாகிகள் நீதிராஜா, சீனுவாசகன்,  அய்யங்காளை, ராஜி, தமிழ் உள்ளிட்டோர் பேசினர். மாவட்ட பொருளாளர் ராம்தாஸ்  நன்றி கூறினார்.

Tags : Tamil Nadu ,Cellur ,Raju ,MLA ,
× RELATED தேர்தல் பரப்புரைக்காக அமித்ஷா, மோடி என...