மண்டைக்காடு கோயிலில் மின் விளக்கு தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

குளச்சல்,மே.19: கன்னியாகுமரி  மாவட்டம் மண்டைக்காட்டில்  பகவதியம்மன் திருக்கோயில் உள்ளது. இங்கு சுற்று  சுவரில் அலங்கார மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன் தினம்  இரவு  மண்டைக்காடு, குளச்சல் பகுதியில் சாரல் மழை பெய்தது. இந்த நிலையில்  கோயிலின் மேற்கு சுவரில் உள்ள  அலங்கார மின்விளக்குகளில் ஒன்று திடீரென   தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்ட அந்த பகுதி பொதுமக்கள்  கோயில் மெயின் சுவிட்சை அணைத்தும்,  எரியும் தீயில் மண்ணை போட்டும் தீயை  அணைத்தனர். இதனால் அங்கு  அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.  மின் கசிவு காரணமாக மின் விளக்கு தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.  இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்து முன்னணி அறிக்கை

இந்து முன்னணி கோட்ட செயலாளர் மிசா சோமன் விடுத்துள்ள அறிக்கை:

கடந்த வருடம் ஜூன் 2 ம் தேதி கோயில் கருவறை மேற்கூரை தீப்பிடித்து எரிந்த சம்பவத்தையடுத்து, தேவ பிரசன்னத்தில் கூறப்பட்ட பரிகாரங்கள் இன்னும் முழுமையாக செய்யப்படவில்லை.தற்காலிக மேற்கூரை மட்டும் போடப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று (நேற்று முன்தினம்) இரவு கோயில் அலங்கார மின் விளக்கு தீப்பிடித்து எரிந்தது.அன்னை ஏதோ அறிகுறி காட்டுவதுபோல் நாங்கள் உணர்கிறோம். கொரோனாவால் தடைப்பட்ட தங்கத்தேர் பவனி கடந்த 1ம் தேதி மீண்டும் நடந்தது.அப்போது மாலை வழக்கமான நேரத்தை கடந்து அம்மனுக்கு பூஜை நடத்தப்பட்டது.  தங்கத்தேர் இழுக்க துவங்கி கிழக்கு பக்கம் மண்டபத்தில் திரும்பும்போது தேர் திரும்பாமல் பின்னோக்கி சென்று வந்தது.இது ஆகமவிதிக்கு எதிரானது.எனவே தேவபிரசன்னத்தில் கூறப்பட்ட பரிகாரங்களை  முழுமையாக செய்திட அறநிலையத்துறை அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன்.

Related Stories: