நாகர்கோவில், மே 19 : குமரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் லிப்ட் கேட்டு பணம், செல்போன்கள் பறிக்கும் சம்பவம் நடந்து வருவதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் சமீப காலமாக நூதன முறையில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் நடந்து செல்வது போல் சென்று, அந்த வழியாக வாகனங்களில் வருபவர்களிடம் லிப்ட் கேட்பது போல் நடித்து பணம், செல்போன்கள் பறிக்கப்பட்டுள்ளன. காவல்கிணறு - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் பைக்கில் சென்றவர்களிடம் இது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துள்ளன. இந்த நான்கு வழிச்சாலையில், இடைப்பட்ட பகுதியில் குமாரபுரம் மட்டுமே முக்கிய சந்திப்பாக உள்ளது. அதன் பின்னர் பெரிய அளவில் கிராமங்கள் இல்லாததால், இந்த வழியாக இரவு நேரங்களில் திருட்டு கும்பல்கள் நடமாடி கைவரிசை காட்டிய வண்ணம் உள்ளனர்.