×

மதுராந்தகம் அருகே தொகுப்பு வீடு இடிந்து தம்பதி படுகாயம்

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த 4 நாட்களுக்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், நீர் நிலைகள் நிரம்புவதுடன், பல வீடுகளில் தண்ணீர் இறங்கி பழுதாகி காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். ஒருபுறம் கோடை காலத்தில் மழை பெய்து, விவசாயிகளையும் மகிழ்ச்சயடைய செய்துள்ளது. இதனால், அடுத்த போகத்துக்கு விவசாயம் செய்ய, இப்போதே தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில், சித்தாமூர் ஒன்றியம் இந்தலூர் ஊராட்சி பெரியார் நகரில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டன. அதில் ஏராளமானோர் வசிக்கின்றனர். இங்குள்ள ஒரு வீட்டில் வசிப்பவர் முருகேசன் (55). விவசாய கூலி தொழிலாளி. அவரது மனைவி அஞ்சலை (52). இவர்களுக்கு சதீஷ் (30) என்ற மகன் உள்ளார். அவருக்கு திருமணமாகி, அதே பகுதியில் குடும்பத்துடன் தனியாக வசிக்கிறார்.

நேற்று முன்தினம் இரவு முருகேசன், சாப்பிட்டு முடித்து தூங்கி கொண்டிருந்தார். அதிகாலையில், முருகேசனின் தொகுப்பு வீடு திடீரென இடிந்து விழுந்தது. இதில், தூங்கிக் கொண்டிருந்த முருகேசன் கால்கள் மீது, சுவர் விழுந்து கால் எலும்புகள் முறிந்தன. அஞ்சலையின் தலை, கை உள்பட உடல் முழுவதும் படுகாயம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் அலறி துடித்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, 2 பேரையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து விஏஓ விஜயகுமார் அளித்த புகாரின்பேரில், அச்சிறுப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதற்கிடையில், சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கராஜ், இந்தலூர் தலைவர் மாலாசிவா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர், முருகேசன் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.

Tags : Madurantakam ,
× RELATED லாரி மீது தனியார் பேருந்து உரசியதால் 4...