சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

திருப்பூர்,  மே 18: சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான முதலமைச்சர் மாநில விளையாட்டு  விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து,  திருப்பூர் மாவட்ட விளையாட்டு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள்  பெற்று சிறந்து விளங்கும் 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் விளையாட்டு வீரர்கள்,  2 சிறந்த பயிற்றுநர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குநர்கள், உடற்கல்வி  ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது தலா ரூ. 1 லட்சம்  வீதம் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டுப்பத்திரம்  ஆகியவற்றை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒவ்வோறு  நிதியாண்டிலும் வழங்கி வருகிறது. விருது பெறும் ஆண்டுக்கு முந்தைய மூன்று  ஆண்டுகள் விளையாட்டில் சாதனைகள் படைத்த விவரங்களைச் சமர்பித்தல் வேண்டும்.  இது தவிர விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர், ஒரு நிர்வாகி,  ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர் (ரூ.10  லட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்தவர்), ஒரு ஆட்ட நடுவர், நடுவர்,  நீதிபதி ஆகியோருக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது ஒவ்வொரு  நிதியாண்டிலும் வழங்கப்படுகிறது.

இவர்களுக்கு மேற்கண்ட விருதிற்கு  ரூ.10 ஆயிரத்துக்கு மிகாமல் ஒரு தங்கப் பதக்கமும், ஒரு பாராட்டுச் சான்றிதழும்  வழங்கப்படுகிறது. இவர்களுக்கு விருது வழங்குவதற்கு முந்தைய இரண்டு ஆண்டு  செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். பூர்த்தி  செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு  மேம்பாட்டு ஆணையம், ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், பெரியமேடு, சென்னை  தலைமையக முகவரிக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 10.06.2022. மேலும்  விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை தொடர்பு  கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: