தூத்துக்குடி-மதுரை 4வழிச்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மீளவிட்டான் ரயில்வே மேம்பால பணி 3 மாதத்துக்குள் முடிக்கப்படும் அகில இந்திய வர்த்தக தொழிற்சங்க விழாவில் கனிமொழி எம்பி பேச்சு

தூத்துக்குடி, மே 18: தூத்துக்குடி-மதுரை நான்குவழிச்சாலையில் வாகனப்போக்குவரத்திற்கு இடையூறாகவுள்ள மீளவிட்டான் ரயில்வே மேம்பாலப்பணிகள் 3மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று அகில இந்திய வர்த்தக தொழிற் சங்க விழாவில் கனிமொழி எம்பி கூறினார். தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழிற் சங்கத்தின் 2022-24ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நேற்று ஏவிஎம்.கமலவேல் மஹாலில் நடந்தது. விழாவினை, கனிமொழி எம்.பி., சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

விழாவில், புதிய நிர்வாகிகளான அகில இந்திய வர்த்தக தொழில் சங்க தலைவர் தமிழரசு, பொதுசெயலாளர் சங்கர் மாரிமுத்து, பொருளாளர் சேசையா வில்லவராயர், துணை தலைவர்கள் பிரேம் வெற்றி, பாலமுருகன், சுரேஷ்குமார், இணை செயலாளர்கள் விவேகம் ரமேஷ், ராஜேஷ் பாலசந்திரன், நார்டன், நிர்வாக செயலாளர் பிரேம் பால்நாயகம் ஆகியோருக்கு கனிமொழி எம்.பி பதவிப்பிரமாணம் செய்து வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது: ‘தமிழகத்தில் இன்று தொழில் வளர்ச்சிக்கு ஏதுவான ஆட்சி நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் இருக்க கூடிய முதலீட்டாளர்கள் தலைவர் கலைஞர் ஆட்சியில் எப்படி தமிழகத்தில் முதலீடு செய்தார்களோ? அதே போன்று இப்போது பலர் தமிழகத்தில் தொழில் முதலீடுகளை செய்திட முன் வருகின்றனர்.

தூத்துக்குடியில் அதிகப்படியான முதலீட்டாளர்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இதற்கேற்ப விரைவில் இங்கு ஐடி பார்க் அமைய இருக்கிறது. மேலும், விமான நிலைய விரிவாக்கம், துறைமுக விரிவாக்கப்பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி-மதுரை நான்குவழிச்சாலையில் வாகனப்போக்குவரத்திற்கு பெரும் இடையூறாக இருந்து வரும் மீளவிட்டான் ரயில்வே மேம்பால பணிகள் இன்னும் 3 மாதத்தில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்து விடும்’ என்றார்.

இதில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பொதுமேலாளர்கள் சூரியராஜ், ஆறுமுகபாண்டியன், மண்டல மேலாளர் சுரேந்திரகுமார், ஸ்பிக் முழு நேர இயக்குனர் ராமகிருஷ்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அம்ரிதா கௌரி, டிசிடபிள்யு மூத்த செயல் தலைவர் சீனிவாசன், இந்தியன் வெண்ணிலா குழும தலைமை செயல் அதிகாரி மகேந்திரன், அகில இந்திய தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் ஜோ.பிரகாஷ், ஏ.வி.எம்.மணி, ஜோ.வில்லவராயர், உதயசங்கர், தொழில்அதிபர் எஸ்டிஆர்.டி.பொன்சீலன், சங்க முன்னாள் இணை செயலாளர் ராஜாஸ்டாலின் மற்றும் தொழில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: