திருச்செந்தூர் நகராட்சி கூட்டம்

திருச்செந்தூர், மே. 18: திருச்செந்தூர் நகராட்சி சாதாரண கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி சேர்மன் சிவஆனந்தி தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் வேலவன், துணைத் தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகராட்சிக்குட்பட்ட 24வது வார்டு கணேசபுரம், 8வது வார்டு, 10வது வார்டு மற்றும் 19வது வார்டு உள்ளிட்ட இடங்களில் அடிப்படை வசதிகளை மேற்கொள்வது எனவும், அனைத்து வார்டுகளிலும் குடிநீர் தொட்டிகளை பராமரித்தும், புதிய தொட்டிகள் அமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

 மேலும் நகராட்சி தேவைக்கு புதிய பேட்டரி வாகனங்கள் 20 வாங்குவது, அமலிநகர் முதல் முத்துமாலைஅம்மன்கோயில் தெரு வரையிலும், ஜீவாநகர் முதல் கல்யாணசுந்தரவிநாயகர் கோயில் தெரு வரையிலும் மற்றும் அரசு மருத்துவமனை பின்புறம் முதல் எடிசன் மருத்துவமனை எதிர்புறம் வரை புதிதாக பிரதான குடிநீர் குழாய் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.

 திருச்செந்தூர் நகராட்சிக்கு 5 கோடி மதிப்பில் புதிய அலுவலகம் கட்டுவது, 15 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டுவது, 5 கோடி மதிப்பில் தினசரி சந்தை கட்டிடம் கட்டுதல், 2 கோடி மதிப்பில் புதிய நூலகம் மற்றும் அறிவு சார் மையம் அமைத்தல், 36 லட்சம் செலவில் திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகில் மாட்டுத்தாவணியில் புதியதாக கழிப்பிடம் கட்டுதல் மற்றும் ரூ.6 லட்சத்தில் புதியதாக நகர்ப்புற காடுகள் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.

மேலும் கூட்டத்தில் நகராட்சியில் கட்டிடம் மற்றும் சாலை பணி களை மேற்கொள்ள புதிய ஒப்பந்தகாரர்களைப் பதிவு செய்வதற்கும், நகராட்சி பகுதியில் கட்டிட வரைபடம் வரைய வரைவாளர் பதிவு செய்வது மற்றும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் வளாகத்தில் சேரும் குப்பைகளை அகற்ற நகராட்சி சார்பில் தொகை நிர்ணயம் செய்வது ஆகிய மூன்று தீர்மானங்களுக்கும் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒத்திவைக்கப்பட்டது. மற்ற 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் தலைமை எழுத்தர் கிருஷ்ணவேணி தீர்மானங்களை வாசித்தார். நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெற்றிவேல்முருகன் நன்றி கூறினார்.

Related Stories: