திருக்கோவிலூர் அருகே பைக் விபத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பலி

திருக்கோவிலூர், மே 18: திருக்கோவிலூர் அடுத்த வீரபாண்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகன் கோவிந்தன் (65). முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவர் சொந்த வேலை நிமித்தமாக நேற்று வீரபாண்டியில் இருந்து  இருசக்கர வாகனத்தில் திருக்கோவிலூர் சென்று பணியை முடித்துவிட்டு மீண்டும் வீரபாண்டிக்கு வந்து கொண்டிருந்தார். தேவனூர் ரைஸ் மில் எதிரில் வந்தபோது இவரது வாகனமும் அரகண்டநல்லூர் அடுத்த புத்தூர் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் திருக்கோவிலூர் என் ஜி ஜி ஓ நகர் பகுதியை சேர்ந்த தேவசகாயம், கார்த்திகேயன் ஆகியோர் வந்த  இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் பலத்த சத்தத்துடன் மோதிக்கொண்டன.

இந்த சத்தத்தால் அப்பகுதியில் வசித்து வந்த பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு வந்து பார்த்தபோது மூவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். பின்னர் அங்கிருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மூவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் கோவிந்தன் மட்டும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் ,மேலும் தேவசகாயம் கார்த்திகேயன் ஆகிய இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக  முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் இந்த சம்பவத்தால் தேவனூர் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories: