இருளர் பெண்கள் பலாத்கார வழக்கில் ஜாமீன் ரத்தானதால் விழுப்புரம் கோர்ட்டிலிருந்து அரக்கோணம் இன்ஸ்பெக்டர் தப்பிச்சென்றாரா?

விழுப்புரம்,  மே 18: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள தி.மண்டபம்  கிராமத்தில் வசித்து வரும் பழங்குடியின இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த சிலரை  கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் திருட்டு வழக்கு ஒன்றுக்காக  திருக்கோவிலூர் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை  நடத்தினர். இது தொடர்பாக திருக்கோவிலூர் போலீசார், தி.மண்டபம் கிராமத்தில்  உள்ள பழங்குடி இருளர்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்குள் அத்துமீறி  நுழைந்து சோதனை நடத்தியதோடு, விசாரணை என்ற பெயரில் பழங்குடியின இருளர்  சமுதாயத்தைச் சேர்ந்த 4 பெண்களை அழைத்து சென்றனர். அப்போது ஒரு  கர்ப்பிணி பெண் மற்றும் 17 வயது சிறுமி உள்ளிட்ட 4 பழங்குடியின இருளர்  பெண்களை, காட்டு பகுதிக்கு அழைத்து சென்று திருக்கோவிலூர் போலீசார் பாலியல்  வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்போது பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியது. இதுதொடர்பாக,  திருக்கோவிலூர் ஆய்வாளர் னிவாசன்,  சிறப்பு உதவி ஆய்வாளர் ராமநாதன், தலைமைக் காவலர் தனசேகர், காவலர்கள்  கார்த்திகேயன், பக்தவச்சலம் உள்ள 5 போலீசார் பணியிடை நீக்கம்  செய்யப்பட்டதோடு, அவர்கள் மீது திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் வழக்கு  தொடரப்பட்டது.

பின்னர், இவ்வழக்கு  விழுப்புரத்தில் உள்ள வன்கொடுமை  தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை  நடைபெற்று வருகிறது. பழங்குடியின இருளர் பெண்களை பாலியல்  வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய போலீசார் 4 பேர் ஏற்கனவே ஜாமீன்  பெற்று விட்டனர். ஆனால், தற்போது அரக்கோணம் நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டராக  பணியாற்றி வரும் னிவாசன் மட்டும் ஜாமீன் பெறாமல் இருந்துவந்துள்ளார்.  இதனிடையே பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால் விழுப்புரம் கோர்ட்டில்  இன்ஸ்பெக்டர் னிவாசன் நேரில் ஆஜரானார்.  விசாரணையின் போது இன்ஸ்பெக்டர் னிவாசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து  நீதிபதி பாக்கியஜோதி உத்தரவிட்டார். இதனால், இன்ஸ்பெக்டர் அவசர, அவசரமாக  நீதிமன்றத்திலிருந்து வெளியேறினார். ஜாமீன் ரத்தானதால் நீதிமன்றத்திலிருந்து தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் பரவியது. இது தொடர்பாக  எஸ்பி நாதாவிடம் கேட்டபோது, இவ்வழக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட  காவல்துறையைச் சேர்ந்தது. விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு  நடைபெற்று வருகிறது. மற்றபடி இது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றார்.  இதுதொடர்பாக இங்குள்ள காவல்நிலையத்தில் புகார் ஏதும் கொடுக்கவில்லை என்றும்  தெரிவித்தார்.

Related Stories: