×

மன்னார்குடியில் நூதனமுறையில் ஜவுளிகடைக்காரரை ஏமாற்றி ரூ.10ஆயிரம் அபேஸ்

மன்னார்குடி, மே 14: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பெரியகடை வீதியில் உள்ள ஜவுளி கடைக்கு நேற்று முன்தினம் மதியம் 12 மணியளவில் வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து, நெற்றியில் திருநீறு, குங்குமம் பூசி முகக் கவசம் அணிந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் வந்து கடை மேலாளரிடம், தான் பிரசித்தி பெற்ற மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் இருந்து வருவதாகவும், கோயிலில் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணிகள் நடந்து வருவதாகவும், அதில் ஏராளமான சில்லறை நாணயங்கள் உள்ளதாகவும், உங்கள் கடைக்கு தேவைப்பட்டால் அவற்றை பணம் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம் என்றும், குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பிய கடைமேலாளர் ரூ.10 ஆயிரத்தை கடை ஊழியர் ஒருவரிடம் கொடுத்து நபருடன் அனுப்பி வைத்தார். பின்னர், கோயில் வாசலில் கடை ஊழியரை காத்திருக்க சொன்ன மர்மநபர் அவரிடமிருந்து ரூ.10 ஆயிரத்தை வாங்கிக்கொண்டு கோயிலுக்குள் சென்றவர் நீண்ட நேரம்ஆகியும் திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த கடை ஊழியர் நடந்த சம்பவத்தை செல்போன் மூலம் கடை மேலாளரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கோயிலுக்குள் வந்து மர்மநபரை தேடியும் கிடைக்கவில்லை. சம்பவம்குறித்து மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் ஜவுளிக்கடை மேலாளர் புகார் அளித்தார். மேலும் ஜவுளி கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த உருவப்படத்தை வைத்து மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.


Tags : Mannargudi ,
× RELATED ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த...