கரூர் டவுன் காவல் நிலையத்தில் குவிந்த திருநங்கைகள்

கரூர், மே 14: கரூர் டவுன் காவல் நிலையத்தில் 10க்கும் மேற்பட்ட திருநங்கைகள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கரூர் பேருந்து நிலையத்தில் திருநங்கைகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் 2 அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. இந்த பிரச்னை சம்பந்தமாக கரூர் டவுன் காவல் நிலையத்தில் 5க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் கரூர் டவுன் காவல் நிலையத்துக்கு 10க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வந்தனர். இவர்களில் இரண்டு பேர் உடலில் மண்ணெண்ணையை ஊற்றிய நிலையில் வந்தனர்.காவல் நிலையம் வந்த அவர்கள், போலீசார்களிடம் எங்களிடம் விசாரணை மேற்கொள்வதால் பல்வேறு பாதிப்புகளை சந்திக்கிறோம் என முறையிட்டனர். அங்கிருந்த போலீசார், அவர்களிடம் பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால், கரூர் டவுன் காவல் நிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: