×

மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 1,049 குழந்தைகளுக்கு நிவாரணம்

சேலம், மே 13:சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 1,049 குழந்தைகளுக்கு ₹32 கோடி நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் ₹3 ஆயிரம் பராமரிப்பு தொகையும் வழங்கப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா தொற்று பரவல் இருந்து வருகிறது. இரண்டாவது அலையில் கடுமையான மூச்சுத்திறணலுக்கு ஆளாகி பலர் இறந்தனர். இந்த திடீர் உயிரிழப்புகளால், குழந்தைகள் தங்களின் பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பெற்றோரை இழந்த 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு நிவாரணத் தொகையை அரசு அறிவித்தது.
இதன்படி தாய், தந்தை என பெற்றோர் இருவரையும் கொரோனாவால் இழந்த குழந்தைகளுக்கு ₹5லட்சத்திற்கான காசோலையும், தாய் அல்லது தந்தை ஆகியோரில் ஒருவரை இழந்த குழந்தைக்கு ₹3 லட்சத்திற்கான காசோலையும் தமிழக அரசின் சமூக பாதுகாப்பு துறை வழங்கி வருகிறது.

இந்த வகையில் சேலம் மாவட்டத்தில் இதுவரையில் பெற்றோர் இருவரையும் இழந்த 34 குழந்தைகளின் பெயரில் தலா ₹5 லட்சத்திற்கான காசோலை, பெற்றோரில் ஒருவரை இழந்த 1,015 குழந்தைகளுக்கு தலா ₹3 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, மாவட்டத்தில், பெற்றோரை இழந்த 1,049 குழந்தைகளுக்கு ₹32.15 கோடி நிவாரண தொகை கொடுத்துள்ளோம். இதில், பெற்றோர் இருவரையும் இழந்த 34 குழந்தைகளுக்கும், பெற்றோரில் ஒருவரை இழந்த 1,015 குழந்தைகளுக்கும் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மாதமும் பாரமரிப்பு தொகையாக ₹3 ஆயிரமும் வழங்கப்பட்டு வருகிறது,’’ என்றனர்.

Tags : Corona ,
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை:...