×

இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் மூலம் 62 ஆயிரம் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு

நாமக்கல், மே 13: நாமக்கல் மாவட்டத்தில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் கீழ், 62 ஆயிரம் குழந்தைகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இல்லம் தேடிக் கல்வித்திட்டத்தின் கீழ் எர்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற்று வரும் சிறப்பு வகுப்பினை, மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: பள்ளி மாணவ, மாணவிகளின் கல்விகற்கும் திறன் பாதிக்கப்படாமல் இருக்கவும், கற்றல் திறனை வலுப்படுத்தவும், 2 ஆண்டு காலமாக நிலவிய கற்றல் இடைவெளியை போக்க, இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை தமிழக முதல்வர் துவக்கி வைத்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளின் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சமுதாயக் கூடம் போன்ற பொது இடங்களில் போதிய மாணவ, மாணவிகளை அமர வைத்து தன்னார்வலர்களை கொண்டு எளிய முறையில், தினசரி சுமார் 1.30 மணி நேரம் வரை கல்வி கற்பிக்கப் படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், இத்திட்டத்தின் மூலம் 4,553 பெண் தன்னார்வலர்களை கொண்டு, 62,083 மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு கற்கும் திறன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

தொடர்ந்து கீரம்பூர் அரசு துணை சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு நோயாளிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள், மருந்துகள் கையிருப்பு போன்றவற்றை பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது சுகாதாரத்துறை துணை இயக்குநர் பிரபாகரன், பிஆர்ஓ சீனிவாசன், வட்டார மருத்துவ அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED மாநகராட்சி மேயர், கமிஷனர் வரிசையில் நின்று வாக்களிப்பு