மக்கள் தொடர்பு முகாமில் ₹16 லட்சம் நலத்திட்ட உதவி கலெக்டர், எம்எல்ஏ வழங்கினர்

மானாமதுரை, மே 13: மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குவளைவேலி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் மதுசூதனன்ரெட்டி தலைமை வகித்தார். எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார் முன்னிலை வகித்தார். வட்டாட்சியர் தமிழரசன் வரவேற்றார். முகாமில் வருவாய்த்துறை சார்பாக 46 நபர்களுக்கு பட்டாவும், 20 நபர்களுக்கு முதியோர் உதவித் தொகையும்,12 நபர்களுக்கு குடும்ப அட்டைகளும், மருத்துவத்துறை சார்பாக 10 நபர்களுக்கு மருந்துப் பெட்டகமும், 4 தாய்மார்களுக்கு மகப்பேறு நிதி உதவியும், ஊரக வளர்ச்சித்துறை சார்பாக 11 நபர்களுக்கு தனி நபர் இல்லக் கழிப்பறையும், 4 சமுதாய உறிஞ்சு குழிகளும், வேளாண்மைத் துறை சார்பாக 5 நபர்களுக்கும், தோட்டக்கலைத் துறை சார்பாக 7 நபர்களுக்கும் என மொத்தம் 123 பயனாளிகளுக்கு சுமார் ரூ.16 லட்சத்து 44 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதுசூதனன்ரெட்டி, எம்எல்ஏ தமிழரசிரவிக்குமார் ஆகியோர் வழங்கினர்.

மேலும் குவளைவேலி கிராமத்தில் புதிய பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தினையும் கலெக்டர் மதுசூதன்ரெட்டி துவக்கி வைத்தார். மேலும், இரண்டு புதிய சாலைப் பணிகளுக்கான உத்தரவையும் வழங்கினார். இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், சிவகங்கை கோட்டாட்சியர் முத்துக்கழுவன், பால்வளத்துறை துணைப் பதிவாளர் ராஜீசெல்வம், சுகாதாரத்துறை இணை இயக்குனர், வேளாண்மை துறை இணை இயக்குனர் ஆகியோர் திட்ட விளக்க உரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் மானா மதுரை ஊராட்சி ஒன்றிய தலைவர் லதா அண்ணாத்துரை, துணைத்தலைவர் முத்துச்சாமி, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் அண்ணாதுரை உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர். மானாமதுரை சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் தனலெட்சுமி நன்றி கூறினார்

Related Stories: