பின்னலாடை நிறுவனங்களுக்கு வங்கிகள் கூடுதல் கடன் வழங்க வேண்டும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் கோரிக்கை

திருப்பூர், மே 13: பின்னலாடை நிறுவனங்களுக்கு வங்கிகள் கூடுதல் கடனுதவி வழங்க வேண்டும் என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம், அனைத்து வங்கி உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள கடிதம்: இந்திய அளவில் அனைத்து பொருட்கள் ஏற்றுமதியில் திருப்பூர் பின்னலாடைத்துறையின் பங்கு 1.07 சதவீதம் ஆகும். பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு பனியன் தொழில்துறையினர் ஆடைகளை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். இந்நிலையில் பின்னலாடை உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளான நூல் விலை அபரிதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நூல் விலை 2 மடங்கு உயர்ந்து விட்டது. 18 மாதங்களுக்கு முன்பு 1 கிலோ நூல் ரூ.200க்கு வாங்கப்பட்டது. தற்போது அந்த பணத்தில் 400 கிராம் நூல் மட்டுமே வாங்க முடியும். அந்த அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. பின்னலாடை வர்த்தகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களே அதிகம். சங்கிலித்தொடர் போல் ஒவ்வொரு தொழிலுக்கும் தொடர்பு உள்ளது. ஆடை உற்பத்தி செலவுக்கு போதுமான பணப்புழக்கம் இல்லாமல் உற்பத்தியாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தும் முறையிட்டோம்.

கடந்த காலத்தில் பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு வங்கிகள் கடன் வழங்கி உதவி வந்ததைப்போல் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கடுதலாக கடனுதவி அளித்து பின்னலாடை தொழில் தொடர்ந்து நடைபெற உதவ வேண்டும். இதன் மூலம் உற்பத்தி பெருகுவதுடன் தொழிலாளர்களும் வேலைவாய்ப்பை பெற முடியும். இதற்கு வங்கிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: