×

2 ஆண்டுகளுக்குப் பிறகு உலக செவிலியர் தினம் உற்சாக கொண்டாட்டம்

நெல்லை,  மே 13:  கொரோனா வைரஸ் பரவல் குறைந்ததால், உலக செவிலியர் தினம் 2  ஆண்டுகளுக்கு பின்னர் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. விளக்கேந்திய மங்கை என உலகம்  முழுவதும் போற்றப்படும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்த தினமான  மே 12ம் தேதி ஆண்டுதோறும் உலக செவிலியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இத்தாலியைச்  சேர்ந்த இவர் ஐரோப்பாவில் நடந்த க்ரீமியன் போரில் காயமடைந்தவர்களுக்காக  இரவிலும் விளக்கு  ஏந்தி தேடிச் சென்று மருத்துவ சேவை செய்தார். அவரது  மகத்தான சேவையை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் அவரது பிறந்தநாள் உலக செவிலயர்  தினமாக கொண்டாடப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக  கொரோனா வைரஸ் பரவல் காரணமாக செவிலியர் தினம் கொண்டாட்டங்கள் களையிழந்தது. செவிலியர் தினத்திலும் கொரோனா பணி அதிகமாக இருந்தது. இந்த  நிலையில் தற்போது கொரோனா வைரஸ் குறைந்ததால் 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு செவிலியர் தினம் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.  இதே போல் நெல்லை அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்த விழாவிற்கு முன்னிலை வகித்த   மருத்துவமனை தலைமை செவிலிய கண்காணிப்பாளர் (நிலை 1) திருமால்தாய், செவிலிய  கண்காணிப்பாளர் பிச்சைவடிவு ஆகியோர் நைட்டிங்கேள்  படத்திற்கு மாலை அணிவித்தனர். பல்நோக்கு மருத்துவமனை செவிலியர் ஜெமிலா  பீவி, பானுமதி, நர்சுகள் சங்க மாநில துணைத்தலைவர்கள் மணிகண்டன்,  கீதா கிருஷ்ணன் மற்றும் பலர் பேசினர். இதில் பங்கேற்ற செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி விழிப்புணர்வு  உறுதிமொழி ஏற்றனர். காலை ஷிப்டில் பணிக்கு வந்த சுமார் 400 நர்சுகள்  கலந்துகொண்டனர். இதேபோல் மாவட்ட மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.

Tags : World Nurses Day ,
× RELATED உலக செவிலியர் தினத்தையொட்டி அரசு...