கடலூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு விடப்பட்ட காலவரையற்ற விடுமுறை ரத்து

சிதம்பரம், மே 13: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக்கல்லூரி கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் படித்து வரும் இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு உள்ளிட்ட மருத்துவ மாணவர்கள் தங்களது கல்வி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த சில தினங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால் கடந்த மாதம் 25ம் தேதி முதல் மருத்துவக்கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் விடுதிகளையும் காலி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. பின்னர் அடுத்த சில தினங்களில் மாணவர்கள் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனின் உறுதிமொழியை ஏற்று போராட்டத்தை கைவிட்டனர்.இந்த நிலையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிவாளர் டாக்டர் சீத்தாராமன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், மாணவர் போராட்டத்தால் கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது ரத்து செய்யப்படுவதாகவும், இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும், 12ம் தேதி (நேற்று) மாலை முதல் விடுதிகள் மற்றும் விடுதி உணவகங்கள் செயல்பட தொடங்கும் எனவும் தெரிவித்திருந்தார். கல்லூரிகளுக்கு அறிவிக்கப்பட்ட காலவரையற்ற விடுமுறை விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று முதல் துவங்க உள்ளன.

Related Stories: