தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி மீண்டும் தொடங்கியது

குறிஞ்சிப்பாடி, மே 13: தஞ்சாவூரில் இருந்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வரை 165 கிலோ மீட்டர் சாலை முக்கியமான சாலையாகும். இதில், போக்குவரத்து நெரிசல், சாலை விபத்து மற்றும் பயண நேரத்தை குறைத்து பாதுகாப்பான பயணத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டது. இதற்காக ரூ.3,600 கோடி செலவில் 2015ம் ஆண்டு முதல் தஞ்சை-விக்கிரவாண்டி இடையே புதிதாக பாலங்கள் அமைக்கும் பணி தொடங்கியது.

விக்கிரவாண்டி முதல் சேத்தியாத்தோப்பு வரை, கெடிலம், தென்பெண்ணை உள்ளிட்ட ஆறுகளில் 26 ஆற்று பாலங்கள், 27 சாலை மேம்பாலங்கள், 3 ரயில்வே மேம்பாலங்கள், 2 கனரக வாகன நிறுத்துமிடங்கள் என ஒரு கட்டமாகவும், சேத்தியாத்தோப்பு முதல் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் வரை 34 ஆற்று பாலங்கள், ஜெயங்கொண்டம், கூட்டு ரோடு, மீன்சுருட்டி, குமாரக்குடி உள்ளிட்ட 23 இடங்களில் மேம்பாலங்கள், ஒரு சுங்கச்சாவடி என இரண்டாம் கட்டமாகவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், விக்கிரவாண்டி முதல் சேத்தியாத்தோப்பு வரையிலான சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொண்ட தனியார் நிறுவனம் முறையாக பணிகளை உரிய நேரத்தில் செய்து முடிக்காமல், அரைகுறையாக கிடப்பில் போட்டுச் சென்றது.  இதனால் கடும் அவதி அடைந்து வந்த பொதுமக்கள், பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து, விக்கிரவாண்டி முதல் சேத்தியாத்தோப்பு வரையிலான சாலை மேம்பாட்டு பணிகளுக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ததுடன், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது. மேலும் பண்ருட்டி, வடலூர், சேத்தியாத்தோப்பு நகர பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகளை மாநில அரசு, தேசிய நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது.

Related Stories: