பாடாலூர் மேற்கு கிராமத்தில் பொது பாதையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்

பெரம்பலூர், மே 12: பெரம்பலூர் அருகே பாடாலூர் தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள், கிராம முக்கியஸ்தர் மணிவேல் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: பாடாலூர் மேற்கு கிராமத்தில் செல்வமுத்து மாரியம்மன் கோயில் 2 இடங்களில் உள்ளது. இதில் அனைவரும் அங்கு சென்று வழிபட்டு வருகிறோம். அதில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உள்ள மாரியம்மன் கோயிலில் இருந்து செக்கடிமேடு கிராம நிர்வாக அலுவலகம் வழியாக உள்ள பாடாலூர்-தெரணி பொது தார் சாலை வழியாக செல்ல அனுமதிக்க வேண்டும். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பொது தார்சாலையில் சாமி ஊர்வலம் செல்ல முயன்ற போதும் கூட அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையின் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பொதுப்பாதையை யாரும் தடுக்கக்கூடாது என உத்தரவிட்டபோதும் கூட எங்களது நியாயமான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே பாடாலூரில் உள்ள பொது தார் சாலையை அனைத்து சமூகத்தினரும் அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: