நெல்லை ஜி.ஹெச் அருகே சாலையோரம் தேங்கிநிற்கும் கழிவுநீரால் சுகாதாரசீர்கேடு

கேடிசி நகர், மே 12: நெல்லை ஜி.ஹெச் பின்புற சாலையோரம் தேங்கி நிற்கும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதனால் அவதிப்படும் வியாபாரிகள் உள்ளிட்டோர் விரைவில் சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.  பாளை ஐகிரவுண்டில் செயல்படும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் புறநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இவர்களில் மேல் சிகிச்சை தேவைப்படுவோர் உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுகின்றனர். இவர்களுக்கு உதவியாளர்களாக உறவினர்கள் இருந்து வருகின்றனர். இவ்வாறு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்துசெல்லும் இம்மருத்துவமனையின் பின்புறம் உள்ள சாலையில் முறையான பராமரிப்பின்றி ராட்சத பள்ளம் உருவானது. மழை காலத்தில் பெருக்கெடுக்கும் தண்ணீரும், கழிவுநீரும் தேங்கி கலந்து நாட்கணக்கில் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் சுகாதார சீர்கேடும் நிலகிறது. இதனால் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மூக்கை பிடித்துக் கொண்டு முகம்சுழித்து செல்கின்றனர்.  மேலும் இங்குள்ள பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு அதில் இருந்து அவ்வப்போது வெளியேறும் கழிவுநீரும் இதில் கலப்பதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. இதனால் அவதிப்படும் அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள், இந்த பிரச்னைக்கு நிரந்தரத்தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: