கெங்கவல்லியில் கோயில் விழாவில் கோஷ்டி மோதல் 12 பேர் மீது வழக்கு

கெங்கவல்லி, மே 12:  கெங்கவல்லியில் ஆதிசக்தி மாரியம்மன் கோயில் விழாவில் நேற்று முன்தினம் மஞ்சள் நீராட்டு நடைபெற்றது. அப்போது, 4வது வார்டு பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவனுக்கும், முருகன் என்பவரின் வீட்டுக்கு விருந்தாளியாக வந்திருந்த பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் ஒருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அவர்களை அங்கிருந்தவர்கள் விலக்கி விட்ட நிலையில், இரவு 9 மணியளவில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர், கோஷ்டி மோதலாக மாறியது. இதில், இரு தரப்பினரும் சரமாரி தாக்கிக் கொண்டனர். அப்போது, கல்லூரி மாணவன் உருட்டுக்கட்டையால் பள்ளி மாணவனை சரமாரி தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த அவர் மயங்கி சரிந்தார். அதனை தட்டிக்கேட்ட நவீன்குமார் மற்றும் நர்மதா ஆகியோரையும் கல்லூரி மாணவன் தாக்கியுள்ளார். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் பள்ளி மாணவன் மற்றும் நவீன்குமார், நர்மதா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தன்னை தாக்கி விட்டதாக கூறி கல்லூரி மாணவனும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

இதுகுறித்து பள்ளி மாணவன் கொடுத்த புகாரின்பேரில், கெங்கவல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார்(பொ) விசாரணை நடத்தி கல்லூரி மாணவன் மற்றும் அவரது உறவினர்களான லட்சுமி, மருதம்பாள், முருகன் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார். கல்லூரி மாணவன் கொடுத்த புகாரின்பேரில், பள்ளி மாணவன் மற்றும் அவரது உறவினர்களான சிவமணி, வினித், வெங்கடேஷ், நவீன், கருப்பாயி, அங்காயி, மயில் மனைவி உள்ளிட்ட 8 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் கல்லூரி மாணவனின் உறவினரான முருகன், பள்ளி மாணவனின் உறவினரான வெங்கடேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: