குமரி முழுவதும் சூறைக்காற்றுடன் மழை

நாகர்கோவில், மே 12: குமரி மாவட்டத்தில் நேற்று அதிகாலை சூறைக்காற்றுடன் பெய்த மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. வங்க கடலில் உருவாகியுள்ள அசானி  புயல் காரணமாக குமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகள் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் இந்த மழை காணப்பட்டது. மாவட்டத்தில் நேற்று அதிகாலை சூறைக்காற்றுடன் ஒரு சில இடங்களில் மழை பெய்தது.  நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகேயும் மரக்கிளை முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக மரம் அகற்றப்பட்டது. இதனை போன்று வடசேரியில் அம்மா உணவகம் அருகேயும் மரக்கிளை முறிந்து விழுந்தது. இதனை அகற்றும் பணிகளில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். நாகர்கோவில் பகுதியில் அதிகாலையில் பெய்த பலத்த மழை காரணமாக அசம்புரோடு, ஆராட்டு ரோடு ஆகியவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக நேற்று காலை வரை மாம்பழத்துறையாறு அணை பகுதியில் 19 மி.மீ மழை பெய்திருந்தது. நாகர்கோவில் 10, முள்ளங்கினாவிளை 18.2, ஆனைக்கிடங்கு 17, பெருஞ்சாணி 8.2, திற்பரப்பு 7.4, பாலமோர் 7.4, புத்தன் அணை 7.4, இரணியல் 4, குருந்தன்கோடு 4, பூதப்பாண்டி 3.4, குளச்சல் 3.4, மயிலாடி 3.2, பேச்சிப்பாறை 3 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது. மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 41.58 அடியாக இருந்தது. அணைக்கு 155 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. பெருஞ்சாணி நீர்மட்டம் 41.35 அடியாக இருந்தது. அணைக்கு 91 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. சிற்றார்-1ல் 9.94 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. சிற்றார்-2ல் 10.04 அடியாக நீர்மட்டம் உள்ளது. பொய்கையில் 18.20 அடியாக நீர்மட்டம் காணப்படுகிறது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 16.32 அடியாகும். அணைகள் மூடப்பட்டுள்ளன. முக்கடல் அணையின் நீர்மட்டம் 5 அடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 8.6 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரியில் கடல் சீற்றம்

அசானி புயல் காரணமாக கன்னியாகுமரியில்  நேற்று முன்தினம் முதல் சூறைக்காற்று வீசிவருகிறது. நேற்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. ராட்சத அலைகள் எழுந்து கரையிலும், பாறைகளிலும் ஆக்ரோஷத்துடன்  மோதின.

இருப்பினும் மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். விவேகானந்தர் நினைவு மண்டபம்  மற்றும் திருவள்ளுவர்  சிலைக்கு, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும்  படகு சேவையும் நடந்தது. முன்னெச்சரிக்கை  நடவடிக்கையாக, கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகள்  கடலில் இறங்க வேண்டாம் என போலீசார் எச்சரித்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனால் முக்கடல் சங்கமம் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் தொலைவில் நின்று கடலழகையும், பாறைகளில்  அலைகள் மோதி சிதறும் காட்சியையும் கண்டு ரசித்தனர்.

Related Stories: