சிவகாசி வேலாயுத ரஸ்தா சாலையில் ரூ.2 கோடி மதிப்பில் அறிவு சார் மையம் ஆணையாளர் தகவல்

சிவகாசி, மே. 12:.சிவகாசி மாநகராட்சி வேலாயுத ரஸ்தா சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடத்தில் ரூ.2 கோடி மதிப்பில் அறிவு சார் மையம் (நூலக கட்டிடம்) அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக மாமன்ற உறுப்பினர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: சிவகாசி மாநகராட்சி வேலாயுதம் ரஸ்தா ரோட்டில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான வார்டு பி, பிளாக் 15 இடத்தில் ரூ.2 கோடி மதிப்பில் அறிவுசார் மையம் (நூலக கட்டிடம்) அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மாநகராட்சிக்கு சொந்தமான அண்ணாமலை நாடார் உண்ணாமலை அம்மாள் பள்ளி வளாகத்தில் உள்ள வார்டு ஜி, பிளாக் 16 இடத்தில் ரூ.5 கோடி மதிப்பில் வணிக வளாக கட்டிடம் அமைக்கவும், விஸ்வநத்தம் கிராமம் மாநகராட்சி மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள இடத்தில் மாநகராட்சிக்கு புதிதாக பிரதான அலுவலக கட்டிடம் கட்டுவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர மேயர் தலைமையில் இன்று மே 12ம் தேதி சிறப்பு மாமன்ற கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது ஆலோசனைகளை தெரிவித்து கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: