×

அசானி புயலால் நீலகிரியில் குளிர் அதிகரிப்பு

ஊட்டி, மே 12: அசானி புயல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் மேக மூட்டம், சாரல் மழை மற்றும் காற்று வீசுவதால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு குளிர் அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மார்ச் முதல் மே மாதம் வரை வெயில் காணப்படும். குறிப்பாக, மே மாதம் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படும். இம்முறையும் கடந்த இரு மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்த போதிலும், சமவெளிப் பகுதிகளை போன்று இங்கும் சூடான காலநிலையே நிலவி வந்தது. கடந்த ஒரு வாரமாக, நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் தினமும் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கன மழையும் பெய்து வருகிறது.

இந்நிலையில், அசானி புயல் காரணமாக சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதற்கு ஏற்றார் போல், நீலகிரி மாவட்டத்திலும் தற்போது காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் காற்று வீசி வருகிறது. மேக மூட்டம் மற்றும் சாரல் மழையும் சில இடங்களில் பெய்து வருகிறது. நேற்று காலை முதல் ஊட்டியில் கடும் மேக மூட்டம் மற்றும் காற்று வீசியது. அவ்வப்போது மழைத்துளிகளும் விழுந்தன. இதனால், காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு தற்போது குளு, குளு காலநிலை நிலவுகிறது.

இந்த காலநிலையால் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் குளிர் அதிகமாக காணப்பட்டது. இதனால், பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் வெம்மை ஆடைகளுடன் வலம் வந்தனர். சமவெளி பகுதிகளில் வெயில் வாட்டி வரும் நிலையில், ஊட்டியில் குளிர் அதிகமாக காணப்படுவதால், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த குளு குளு காலநிலையை அனுபவித்து வருகின்றனர்.

Tags : Nilgiris ,Asani ,
× RELATED வார விடுமுறை நாளில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்