நெரிஞ்சிப்பேட்டை கதவணை நீர்மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் தொடக்கம்

பவானி, மே. 12:  அம்மாபேட்டையை அடுத்த நெரிஞ்சிப்பேட்டை கதவணை நீர்மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனால், கதவணையில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் நெரிஞ்சிப்பேட்டை - பூலாம்பட்டிக்கு இடையிலான படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரைக் கொண்டு செக்கானூர், நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிபட்டி, ஊராட்சிகோட்டை, சமயசங்கிலி மற்றும் வெண்டிபாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள கதவணை நீர்மின் நிலையங்கள் மூலம் தலா 30 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது கதவணைகளில் தலா இரு வாரங்களுக்கு பராமரிப்புப் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

தறபோது நெரிஞ்சிப்பேட்டை பகுதியில் காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் 30 அடி உயரத்துக்கு தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் வெளியேற்றப்பட்டு, கதவணைகள் மற்றும் நீர்மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தண்ணீர் தேக்கப்பட்ட நிலையில் கடல்போல் காட்சி தந்த காவிரி ஆறு, தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் பொலிவிழந்து காணப்படுகிறது. தண்ணீர் இல்லாததால் ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிப்பேட்டைக்கும், சேலம் மாவட்டம் பூலாம்பட்டிக்கும் இடையிலான விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: