ஓசூரில் கோட்டை மாரியம்மன் கோயில் விழா

ஓசூர், மே 11: ஓசூரில் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. இதில் பக்தர்கள் அலகு குத்தி, வாகனங்களில் அந்தரத்தில் தொங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஓசூர் ராம்நகரில் பழமை வாய்ந்த கோட்டை மாரியம்மன் கோயில் உள்ளது. நகரின் காவல் தெய்வமாக விளங்கும் இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக திருவிழா நடைபெறவில்லை, அதனைத்தொடர்ந்து நேற்று கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் அம்மனுக்கு அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஓசூர் அண்ணாநகர், அலசநத்தம், வெங்கடேஷ் நகர், முத்துராயன் ஜிபி. சுண்ணாம்பு ஜிபி, மூக்கண்டப்பள்ளி, சின்ன எலாசகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அலகு குத்தியும், கிரேன் உள்ளிட்ட வாகனங்களில் அந்தரத்தில் தொங்கியபடி சென்றனர்.

மேலும் ராமர், கிருஷ்ணர், காளி ஆகிய வேடங்கள் அணிந்து அந்தரத்தில் தொங்கும் பவர் தொட்டில் கட்டி கோயிலுக்கு சென்றனர். திருவிழாவையொட்டி முக்கிய வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. திருவிழாவில் ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். கோயில் திருவிழாவை முன்னிட்டு ஓசூர் நகரப் பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். போக்குவரத்து நெரிசல் குறைக்க முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டிருந்தது.

Related Stories: