×

சின்னச்சுருளி அருவிக்கு செல்லும் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல்: சுற்றுலாப் பயணிகள் புகார்

வருசநாடு, மே 11: வருசநாடு அருகே, சின்னச்சுருளி அருவிக்கு செல்லும் வாகனங்களுக்கு கூடுதல் அதிக கட்டணம் வசூலிப்பதாக சுற்றுலாப் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம், வருசநாடு அருகே சின்னச்சுருளி அருவி உள்ளது. இந்த அருவிக்கு தேனி, மதுரை, திண்டுக்கல், புதுச்சேரி, பேரையூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் வாகனங்களுக்கு ஊராட்சி சார்பில் ரூ.10, வனத்துறை சார்பில் ரூ.30 வசூலிக்கின்றனர்.

இது குறித்து குமணந்தொழு ஆசைதம்பி கூறுகையில், ‘சின்னச்சுருளி அருவி மேகமலை மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த அருவியில் வரும் தண்ணீர் மூலிகை கலந்து வருவதாக கூறப்படுகிறது. மாதந்தோறும் அமாவாசை மற்றும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்கள் வரும் வாகனங்களை இரண்டு சோதனைச் சாவடிகள் அமைத்து, வனத்துறை மற்றும் ஊராட்சி சார்பில் அதிக அளவில் வசூலிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட சோதனைச் சாவடிகளில் வசூலிக்கும் கட்டணைத்தை குறைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘சின்னச்சுருளி அருவியில் பெண்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை. இருப்பினும் அதிக வசூல் கட்டணம் வசூலிக்கின்றனர். இது குறித்து தமிழக சுற்றுலாத்துறை மற்றும் தேனி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Chinnasuruli Falls ,
× RELATED வெள்ளியை உருக்கி ஊற்றியது போல...