தரத்திற்கான புவிசார் குறியீடு பெற்றவைகளாக தஞ்சை வீணை, நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம்

தஞ்சாவூர், மே 11: திருவையாறு அரசு இசைக் கல்லூரி வளாகத்தில் வனத்துறை மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தஞ்சை மாநகராட்சி கவின்மிகு தஞ்சை இயக்கம், தன்னார்வ சேவை அமைப்புகள் சார்பில் இசை வனம் எனும் இசைக் கருவிகள் தயாரிக்கும் மரங்கள் வளர்க்கும் பணியினை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: இசையுலக வரலாற்றில் இசைக்கருவி தயாரிப்பிற்கு பயன்படும் மரங்களை ஒருங்கே, ஒரு இசைக் கல்லூரி வளாகத்தில் பராமரிக்க திட்டமிடப்பட்டிருக்கும் நிகழ்வு இதுவே முதன்மையாகும். மரம் மண்ணின் வரம். இந்த மரங்கள் இசைக்கருவிகளாக உருமாறி நம் செவிக்கு தேனினும் இனிய பாடல்களாக ஒலிக்கின்றன. இசைக்கருவிகள் தயாரிப்பிற்கு நம் தஞ்சை உலகளாவிய பெருமை பெற்றது. நம் தஞ்சாவூர் வீணை மற்றும் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் அதன் தரத்திற்கான புவிசார் குறியீடு பெற்றவை.

மேலும் இசைக்கருவிகள் தயாரிப்பதற்காக ஒவ்வொரு மரமும் தனித் தன்மை பெற்றது. அந்த வகையில் பலா மரத்தின் மூலம் வீணை, மிருதங்கம் மற்றும் தவில் செய்யப்படும். அதைப்போல் ஆச்சா மரம் மூலம் நாதஸ்வரமும், மூங்கில் மரத்தில் புல்லாங்குழலும் மற்றும் திருவாச்சி. பூவரச, வாகை, வேம்பு குமிழ் தேக்கு போன்ற பல்வேறு மரங்கள் மூலம் பல்வேறு இசைக்கருவிகள் உருவாக்கப்படுகின்றன. ஆகையால் இவ்விசை கல்லூரி வளாகத்தில் இசை வனம் அமைக்கப்படுகிறது என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் அரசு இசைக் கல்லூரி முதல்வர் உமா மகேஸ்வரி, திருவையாறு ஒன்றிய குழு தலைவர் அரசாபகாரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Related Stories: