×

ஊட்டியில் மேக மூட்டம், மழையால் ரம்மியமான காலநிலை

ஊட்டி, மே 11: ஊட்டியில் மேக மூட்டம் மற்றும் அவ்வப்போது மழை பெய்வதால் மிதமான காலநிலை நிலவுகிறது. கோடை விடுமுறையை கொண்டாட வந்துள்ள சுற்றுலா பயணிகள் இந்த ரம்மியமான காலநிலையை அனுபவித்து வருகின்றனர். சமவெளிப் பகுதிகளில் கடும் வெயில் நிலவி வரும் நிலையில், சூடு தாங்க முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பெரும்பாலான மக்கள் கோடை வெயிலை சமாளிக்கவும், அதே சமயம் விடுமுறையை குளிர்ச்சியாக கொண்டாடவும் ஊட்டியை முற்றுகையிட்ட வண்ணம் உள்ளனர். கடந்த வாரம் ஊட்டியில் வெயில் வாட்டி வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக மேக மூட்டம் மற்றும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், ஓரளவு சூடு தணிந்து தற்போது குளிர்ச்சியான கால நிலை நிலவுகிறது.

நேற்று காலை இரண்டு மணி நேரம் கன மழை பெய்தது. பின் மாலை வரை மேக மூட்டம் காணப்பட்டது. இதனால், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்தனர். மேக மூட்டம் மற்றும் மழை காரணமாக காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு சில இடங்களில் குளிரும் காணப்படுகிறது. இதனால், குளிர் தாங்காமல் வெம்மை ஆடைகள், தொப்பிகளுடன் சுற்றுலா தலங்களை வலம் வந்தனர். சமவெளிப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் மற்றும் புழுக்கத்தை தாங்க முடியாமல் நீலகிரிக்கு படையெடுத்துள்ள வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்ட சுற்றுலா பயணிகளை ‘ஜில்’ காலநிலை வெகுவாக கவர்ந்தது. மேக மூட்டம் மற்றும் அவ்வப்போது விழுந்த மழை துளிகளால் ஊட்டி மற்றும் புறநகர் பகுதிகளில் ரம்மியமான காலநிலை நிலவியது. இதனை சுற்றுலா கொண்டாடி மகிழ்ந்தனர்.

Tags : Ooty ,
× RELATED தாவரவியல் பூங்காவில் நடவு...