தா.பழூர் பகுதியில் வாய்க்கால் தூர்வாரும் பணி கலெக்டர் நேரில் ஆய்வு

தா.பழூர், மே 11: அரியலூர் மாவட்டத்தில் மருதையாறு வடிநிலக்கோட்டம், அரியலூர் மற்றும் ஆற்று பாதுகாப்புக்கோட்டம், திருச்சி கட்டுப்பாட்டில் உள்ள வரத்து வாய்க்கால்கள், பாசன வாய்க்கால்கள், உபரி நீர் வாய்க்கால்கள், ஓடை மற்றும் வடிகால்கள் தூர்வார 16 பணிகள் 48.62 கி.மீ. நீளத்திற்கு மேற்கொள்ள ரூ.100 லட்சத்திற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு கல்லணைக்கு தண்ணீர் வரும் காலத்திற்குள் பணிகளை முடிக்க ஆணையிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தா.பழூர் பகுதியில் நீர்வளத்துறையின் சார்பில் பொன்னார் பிரதான வாய்க்காலின் கிளை வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. எண் 1 கிளை வாய்க்கால் பொன்னார் பிரதான வாய்க்காலின் 15.51 கி.மீ லிருந்து பிரிந்து அருள்மொழி கிராமத்தில் தொடங்கி மதனத்தூர், காரைக்குறிச்சி, வாழைக்குறிச்சி, அடிக்காமலை, மேலகுடிகாடு, தென்கச்சி பெருமாள்நத்தம், கீழக்குடிகாடு மற்றும் அண்ணங்காரன்பேட்டை ஆகிய கிராமங்களில் சுமார் 1500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இவ்வாய்க்காலின் மொத்த நீளம் 9.70 கி.மீ ஆகும். இதில் 2 இயந்திரங்கள் கொண்டு 0 கி.மீ முதல் 7.00 கி.மீ வரை பணி நடைபெற்று வருகிறது. அதேபோல் தா.பழூர், வாழைக்குறிச்சி, இடங்கண்ணி, பாலசுந்தரம், அண்ணகாரன் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இயந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி நேரில் சென்று பார்வையிட்டார்

இப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிப்பதுடன், கரைகளின் மேல் போடப்படும் மண் மீண்டும் கீழே விழாதவண்ணம் கரைகள் பலமாக போடப்படுகின்றதா என ஆய்வு மேற்க் கொண்டார். மேலும் கரைகளில் உள்ள பெரிய மரங்கள் வெட்டிவிடாமல் முடிந்த அளவு பாதுகாத்து பணி மேற்க்கொள்ளவும் கூறினார். இந்நிகழ்வில், உதவி செயற்பொறியாளர் சாந்தி, உதவி பொறியாளர் மோகன்ராஜ் மற்றும் தா.பழூர் வருவாய் அலுவலர் தமிழரசன், கிராம நிர்வாக அலுவலர் ஐயப்பன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: