×

கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்; பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு

கோவை, மே 11:  கோவை காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்டில் நேற்று மதியம் வெள்ளமடை பகுதியில் இருந்து காந்திபுரம் நோக்கி தனியார் டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சுக்கு முன்னால் சேரன் மாநகரில் இருந்து காந்திபுரம் நோக்கி அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. கணபதி அருகே அரசு பஸ்சை தனியார் பஸ் முந்தி செல்ல முயன்றது. ஆனால் அரசு டவுன் பஸ் டிரைவர் வழி விடாமல் தொடர்ந்து சென்று கொண்டிருந்ததாக தெரிகிறது.
காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் வந்ததும், அரசு, தனியார் பஸ் டிரைவர் , கண்டக்டர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தனியார் பஸ் கண்டக்டரான பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (35), கணபதியை சேர்ந்த டிரைவர் சந்தோஷ் (28), ரஞ்சித் (27) ஆகியோர் பொள்ளாச்சியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் கார்த்திகேயன் (45) என்பவரை தாக்கினர். தடுக்க வந்த அரசு பஸ் கண்டக்டர் ஒருவரையும் இவர்கள் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த கார்த்திகேயன் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த தாக்குதலை கண்டித்து அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள் காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட்டில் பஸ்சுகளை இயக்க மறுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாக்குதல் நடத்திய 3 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். உரிய பணி பாதுகாப்பு தரவேண்டும் என முறையிட்டனர். தனியார் பஸ்களையும் இயக்க விடாமல்  பஸ் ஸ்டாண்ட் முகப்பு முன் குவிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினர். மேலும் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் அரசு, தனியார் பஸ் ஊழியர்கள் மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உதவி கமிஷனர் வின்சென்ட் தலைமையில் காட்டூர் போலீசார் குவிக்கப்பட்டனர். இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பஸ்களை உரிய டைமிங் முறையில் இயக்கவேண்டும். நேர விதிமுறை மீறி இயக்கக்கூடாது. பஸ்களை முந்தி செல்வதில் விதிமுறை மீறல் கூடாது என போலீசார் அறிவுறுத்தினர். மேலும் தாக்குதல் நடத்திய 3 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

சுமார் 2 மணி நேரம் பஸ்கள் இயக்கப்படாமல் பஸ் ஸ்டாண்ட்டில் நிறுத்தி வைக்கப்பட்டதால் பெரும் கூட்டம் குவிந்தது. 50க்கும் மேற்பட்ட பஸ்கள் பஸ் ஸ்டாண்ட்டில் நிறுத்தி வைக்கப்பட்டன. பயணிகள் பஸ் இயங்காததால் நடந்து சென்றனர். சிலர் ஆட்டோ, கார்களில் பயணம் செய்தனர். பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டதை தொடர்ந்து பஸ்கள் வழக்கம்போல் இயங்கின. கொட்டும் மழையில் இரு தரப்பினர் மோதலால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். கடந்த சில மாதங்களாக பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் டைமிங் பிரச்னையால் மோதல் ஏற்பட்டு வருகிறது. சிலர் மது போதையில் பஸ் ஓட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது. மோதலில் ஈடுபடும் நபர்கள், மது போதையில் வாகனம் ஓட்டும் நபர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். லைசென்ஸ் ரத்து செய்யவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Coimbatore Gandhipuram ,
× RELATED கோவை உக்கடம் குடியிருப்பை...