×

அதிமுகவில் உச்சகட்ட மோதல் விழுப்புரம் கூட்டுறவு வங்கியில் இடைக்கால தலைவர் தேர்வு நீடிக்கும் பிரச்னையால் மக்கள் பாதிப்பு

விழுப்புரம், மே 11: விழுப்புரம் கூட்டுறவு வங்கியில் அதிமுக தலைவர், இயக்குநர்களிடையே ஏற்பட்ட உச்சகட்ட மோதலால் இடைக்காலத் தலைவரை தேர்வு செய்துள்ளனர். விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கியில் அதிமுகவைச் சேர்ந்த தங்கசேகர் தலைவராக இருந்துவந்தார். பொறுப்பேற்ற நாள்முதலே தலைவர், இயக்குநர்களிடையே கடும் மோதல் நீடித்து வந்தது. ஒவ்வொரு கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றுவதில் தலைவர், இயக்குநர்களிடையே கருத்து மோதல் நீடித்தது. இதனால், வங்கியின் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி புதிதாக உறுப்பினர்கள் சேர்க்கை, கடன்வழங்குவது போன்ற பணிகள் பாதிக்கப்பட்டு வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனிடையே, கடந்த 7ம் தேதி விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கியின் நிர்வாகக்குழுக்கூட்டம் தலைவர் தங்கசேகர் தலைமையில் நடந்தது. இதில் இயக்குநர்கள், வங்கி அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், ரூ.2.50 கோடிக்கு கடன் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. திடீரென்று வங்கியின்தலைவர் என்னுடைய கவனத்திற்கு எதையும் கொண்டு வராமல் அதிகாரிகள் செயல்படுவதாகக்கூறி வெளிநடப்பு செய்தார். ஆனால், அதிமுகவைச் சேர்ந்த இயக்குநர்கள் கூட்டத்தை வெளிநடப்பு செய்யவில்லை.

இயக்குநர்கள் அனைவரும் தீர்மானத்தில் கையெழுத்திட்டு அதனை நிறைவேற்றினர். மேலும், முக்கிய தீர்மானத்தையும் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளனர். அதில், 7ம்தேதி நடைபெற்ற நிர்வாகக்குழுக்கூட்டத்தில் வங்கியின் தலைவர் தன்னிச்சையான காரணத்திற்காக வெளிநடப்பு செய்ததால், இடைக்காலத்தலைவராக மூத்த இயக்குநர் தனுசை தேர்வுசெய்வது என்ற தீர்மானத்தை கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளனர். அதிமுகவைச் சேர்ந்தவர்களே தலைவர், இயக்குநர்களாக பதவிவகித்துவரும் நிலையில் அவர்களுக்குள் ஏற்பட்ட உச்சகட்ட மோதலால் இடைக்காலத் தலைவரை தேர்வு செய்துள்ளனர்.

இதுகுறித்து, இயக்குநர்கள் கூறுகையில் நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்ட காலத்திலிருந்ேத தலைவர் இயக்குநர்களை அனுசரித்து செல்வதில்லை. அவரின் தனிப்பட்ட எதிர்மறையான காரணங்களுக்கு நாங்களும் ஒத்துழைக்கவில்லை. எங்களுக்கு வங்கிவாடிக்கையாளர்களும், பொதுமக்களின் நலன்மட்டுமே முக்கியம். சொந்த காரணங்களை பலகோடி புழங்கும் வங்கியில் காட்டுவதுசரியில்லை. நிர்வாகக்குழு எப்போது கலைக்கப்படும் என்று தெரியவில்லை.
தங்களின் பணிகளை சிறப்பாகசெய்து மக்களிடத்தில் நற்பெயரை வாங்கவேண்டுமென்று ரூ.2.50 கோடிகடன் வழங்க தீர்மானத்தை கொண்டு வந்தோம். ஆனால், தலைவர் அன்றையதினம் வெளிநடப்பு செய்துவிட்டுச்சென்றார்.
 இனிமேலும், எங்களால் பொறுக்கமுடியாமல் இடைக்காலத் தலைவரை தேர்வு செய்துள்ளோம். மக்களுக்காக சேவை செய்யத்தான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டோம். மற்றபடி கட்சி மோதல் கிடையாது என்று தெரிவித்துள்ளனர். அதிமுகவினருக்கிடையே ஏற்பட்ட மோதலால் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக வங்கி அதிகாரிகளே புலம்பி வருகின்றனர்.

Tags : AIADMK ,Villupuram ,
× RELATED நாங்கள் கூட்டணி வைக்கலனா அதிமுக ஆட்சி...