பயிற்சி காவலர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை:  ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சாத்தூர் கலைஞர் கருணாநிதி தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் விக்னேஷ்வரன் (26). இவர் கடந்த மார்ச் மாதம் சீருடைப்பணியாளர்கள் தேர்வில் வெற்றி பெற்று காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டார். தற்போது காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர், ஒரு வாரம் விடுமுறை எடுத்து சொந்த ஊர் சென்றார். தினமும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில் விக்னேஷ்வரன் நேற்று முன்தினம் காலை காஞ்சிபுரம் சென்று, அங்குள்ள தனது அறையில் உடைகளை எடுத்து எடுத்து கொண்டு இரவு சொந்த ஊருக்கு புறப்பட்டார். சுமார் 10 மணியளவில் வாலாஜா சுங்கச்சாவடியில், பஸ்சில் இருந்து இறங்கிய அவர் தனது தந்தையை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது, தனக்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதாகவும், வாழப் பிடிக்கவில்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதற்கு ஏழுமலை, ஆறுதல் கூறினார். ஆனால் திடீரென செல்போன் சுவிட்ச் ஆப் ஆனது. இதனால் அதிர்ச்சியடைந்த ஏழுமலை, உறவினர்களுடன் வாலாஜா சுங்கச்சாவடி பகுதிக்கு சென்று மகனை தேடினார். எந்த தகவலும் இல்லை.

இதையடுத்து, வாலாஜா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார், விக்னேஷ்வரன் பேசிய செல்போன் சிக்னலை ஆய்வு செய்தனர். அதில், சுங்கச்சாவடி அருகே தனியார் வீட்டுமனை பகுதியை காட்டியது. அங்கு சென்று இரவு முழுவதும் தேடியும் அவர் கிடைக்கவில்லை. நேற்று அதிகாலை தேடியபோது அங்குள்ள மரத்தில் விக்னேஷ்வரன் வேட்டியால் தூக்குப்போட்டு சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து போலீசார், சடலத்தை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். பயிற்சி காவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: