×

ஊட்டி நகராட்சி மார்க்கெட் வளாகத்தில் இன்டர்லாக் கற்கள் குவித்துள்ளதால் சரக்கு வாகனம் நிறுத்துவதில் சிரமம்

ஊட்டி, மே 10:  பாதாள சாக்கடை குழாய் பராமரிப்பு பணிகளுக்காக அகற்றப்பட்ட இன்டர்லாக் கற்கள் ஊட்டி மார்க்கெட் வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் சரக்கு வாகனங்கள் மார்க்கெட்டிற்குள் வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஏடிசி., மணிகூண்டு பகுதியில் நகராட்சி மார்க்கெட் வளாகம் உள்ளது. இந்நிலையில் காபி அவுஸ் பகுதியில் இருந்து மணிகூண்டு வரை மார்க்கெட்டை ஒட்டியுள்ள நடைபாதைக்கு அடியில் பாதாள சாக்கடை குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் பழுது ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபாதையில் அமைக்கப்பட்டிருந்த இன்டர்லாக் கற்கள் அகற்றப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அகற்றப்பட்ட பழமையான இன்டர்லாக் கற்கள் மார்க்கெட் வளாகத்தில் கருவாட்டு கடை மற்றும் எண்ணெய் கடை அமைந்துள்ள பகுதிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை குழாய்கள் சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில் நடைபாதை இன்டர்லாக் கற்கள் பொருத்தப்பட்டு சீரமைக்கப்பட்டது.

 ஆனால் மார்க்கெட் வளாகத்திற்குள் குவித்து வைக்கப்பட்டுள்ள பழைய கற்கள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் மார்க்கெட்டிற்கு பொருட்கள் கொண்டு வர கூடிய வாகனங்கள் நிறுத்தி சரக்குகளை இறக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள கோழி கடைகளுக்கு நாள்தோறும் சமவெளி பகுதிகளில் இருந்து கோழி இறைச்சி கொண்டு வரப்படுகின்றன. அவ்வாறு கொண்டு வரப்படும் கோழி லாரிகள் மார்க்கெட் வளாகத்தில் கருவாட்டு கடை பகுதியில் நிறுத்தி கோழிகள் இறக்கி கடைகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.

இந்த லாரிகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மார்க்கெட் வளாகத்திற்குள் நிறுத்த வேண்டும் என நகராட்சி தெரிவித்துள்ளது. ஆனால் அவர்கள் மதியம் 12 மணிக்கும் மேல் கோழி லாரிகளை மார்க்கெட்டிற்குள் நிறுத்தி விடுகின்றனர். இதனால் கோழி கழிவுகள் அதிகரித்து காணப்படுவதுடன், கடும் துர்நாற்றமும் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் மூக்கை பொத்தியபடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே கோழி லாரிகள் மார்க்கெட் வளாகத்திற்குள் நீண்ட நேரம் நிறுத்தி வைப்பதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Ooty Municipal Market ,
× RELATED தவறான தகவல் வெளியிட்ட அண்ணாமலை மீது போலீசில் புகார்