×

தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்ட பணியை விரைந்து முடிக்க கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்ட முயற்சி அதிகாரிகள் சமரசம்

நெல்லை, மே 10: தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி பாளை பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பாக இந்து முன்னணியினர் உண்ணாவிரத முயற்சியில் ஈடுபட்டனர். சமரசப்படுத்திய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த நிலையில் போராட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனர்.  தாமிரபரணி ஆற்றுடன் கருமேனியாறு, நம்பியாற்றை இணைக்கும் வகையில் தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டம் கடந்த 2003ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகள் பல கட்டங்களாக நடந்து வந்தது. இதனையடுத்து பல்வேறு காரணங்களால் அந்த பணிகள் நிறுத்தப்பட்டது. இதில் தற்போது திட்டபணிகள் துவங்கி நடந்து வருகிறது.
இந்நிலையில் தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்ட பணிகளை விரைந்து முடிக்ககோரி இந்து முன்னணி சார்பில் பாளை ஐகிரவுண்ட் அருகேயுள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பாக நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான முயற்சியும் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் அரசுராஜா தலைமையில், துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், நிர்வாகி வக்கீல் குற்றாலநாதன் உள்ளிட்டோர் பாளை ஐகிரவுண்ட் அருகே பொதுபணித்துறை அலுவலகம் முன்பாக திரண்டதோடு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.  இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகள் அழைப்பின் பேரில் இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் பொதுப்பணிதுறை இன்ஜினியர் ஆசைதம்பி, போலீஸ் உதவி கமிஷனர் விவேகானந்தன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இதில் தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்ட பணிகள் விரைந்து முடிக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட இந்து முன்னணியினர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

Tags : Public Works Department ,Tamiraparani ,
× RELATED பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள...